×

வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல தடை

பொள்ளாச்சி, பிப்.17:  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதியை ஒட்டிய சுற்றுலா பகுதிக்கு எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வன கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளது. இதில் டாப்சிலிப், குரங்கு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கடந்தாண்டில் தென்மேற்கு பருவமழை சில மாதமாக தொடர்ந்து பெய்தது.  அதன்பின், கடந்த நவம்பர் மாதத்தில் ஓரிரு நாட்கள் மழை பெய்ததுடன், டிசம்பர் மாதத்தில் இருந்து மழை இல்லாமல் இருந்ததுடன், இந்தாண்டில் கடந்த ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமானது. இதனால், வனப்பகுதியில் உள்ள மரங்களில் இருந்து இலைகள் உதிர ஆரம்பித்துள்ளது. வனத்தின் பல பகுதிகளில், மரங்களிலிருந்து கீழே விழுந்த இலைகள் காய்ந்து சறுகாக உள்ளது.
டாப்சிலிப் மற்றும் பரம்பிக்குளம் செல்லும் வழித்தடங்கள், பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதி, நவமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் மரங்கள் காய்ந்து அதிகளவு இலைகள் உதிர்ந்துள்ளது. மேலும், நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் விலங்குகள் இடம் பெயர்வது அதிகரித்துள்ளது.  விரைவில் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், டாப்சிலிப் மற்றும் குரங்கு அருவி உள்ளிட்ட பல சுற்றுலா பகுதிகளுக்கு வரும் பயணிகள் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,`ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தற்போது மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனங்களில் தீப்பிடிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மரங்களில் இருந்து இலைகள் உதிர்வதால், இலைகள் காய்ந்து சறுகாக மாறி உள்ளது. நாளுக்கு, நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வனத்திற்குள் செல்லும் பயணிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. புகைப்பிடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
வனப்பகுதிக்குள் விதிமீறி புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி ஆங்காங்கே நின்று சமையல் செய்யக்கூடாது. வனத்துறையின் விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையினர் கூறும் அறிவுரைகளை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...