×

பொள்ளாச்சியிலிருந்து கோவை வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும்

உடுமலை,பிப்.17 :பொள்ளாச்சியிலிருந்து கோவை வழியாக சென்னைக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரயில்வே மேலாளருக்கு பொள்ளாச்சி எம்.பி.கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ரயில்வே துறையின் 2020ம் ஆண்டுக்கான வருடாந்திர கால அட்டவணை கமிட்டி மாநாடு வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை பெங்களூரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்திய ரயில்வேயின் அனைத்து பிராந்திய ரயில்வே அதிகாரிகளும் கலந்து கொண்டு புதிய ரயில்களுக்கான கால அட்டவனை, தற்போது உள்ள ரயில் சேவைகளின் பயண தூரம் நீட்டிப்பு, ரயில்களின் வேகம் அதிகரிப்பு, கால நேரமாற்றம், ரயில் நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பரிசீலனை செய்து ரயில்வே துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். தென்னக ரயில்வேயால் இந்த மாநாட்டில் கலந்தாய்வு செய்யப்படக்கூடியவற்றை அதன் பொது மேலாளர் சமர்ப்பிக்க உள்ளார்.
இந்நிலையில், பொள்ளாச்சி எம்.பி.சண்முக சுந்தரம் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி உள்ள நினைவூட்டல் கடிதத்தில் கூறியிருப்பதாவது, அகல ரயில்பாதை மாற்றத்திற்க்காக நிறுத்தப்பட்ட கோவை- ராமேஸ்வரம் இரவு நேர விரைவு ரயில், கோவை - தூத்துக்குடி, கோவை -கொல்லம், மதுரை -கோவை இன்டர்சிட்டி ரயில், திண்டுக்கல் -கோவை பயணிகள் ரயில் மேலும் கோவை -பெங்களூர் இரவு நேர புதிய விரைவு ரயில், பொள்ளாச்சி- சென்னைக்கும் இடையே கோவை வழியே இரவு நேர புதிய விரைவு ரயில், மேட்டுப்பாளையம் - தாம்பரம் இடையே பொள்ளாச்சி, பழனி, திருச்சி வழியே புதிய விரைவு ரயில்கள் இயக்க வேண்டும்.
மேலும், திருநெல்வேலி -தாதர் ரயிலை வாரம் இருமுறையாக்கி பழனி, பொள்ளாச்சி வழியே விடுவதற்கும், கொச்சுவேலி ஹூப்ளி ரயிலை கோவை வழியாக இயக்கிடவும், அமிர்தா விரைவு ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்கவும், புதியதாக விடப்படவுள்ள ராமேஸ்வரம் - மங்களூர் ரயிலை கார்வார் வரை நீட்டிக்கவும், பாலக்காட்டில் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக நின்று கொண்டிருக்கும் பாலருவி ரயிலை கோவை வரை நீட்டிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
   தற்போது கோவையில் இருந்து மதியம் புறப்பட்டு பழனி சென்று திரும்ப மதுரை செல்கின்ற ரயிலை கோவை - மதுரை என்று ஒரே ரயிலாக இயக்கிடவும், கோவை பொள்ளாச்சி, கோவை ஜபல்பூர் சிறப்பு ரயில்களை நிரந்தரமாக இயக்கிடவும், கோவையில் இருந்து புறப்படுகிற உதய் எக்ஸ்பிரஸ், செம்மொழி எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்களின் புறப்படும் நேரம் பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது

Tags : Chennai ,Pollachi ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...