×

சேவூரில் டிரான்ஸ்பார்மர் பழுது மும்முனை மின்சாரம் வழங்காததால் தொழிற்துறையினர் அவதி

அவிநாசி,பிப்.17:அவிநாசி அருகே சேவூர் வட்டாரத்தில் உள்ள ஐந்து ஊராட்சிகளில் கடந்த மூன்று நாட்களாக மும்முனை மின்சாரம் வழங்கவில்லை. இதனால் தொழிற்துறையினர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அவிநாசி மின்கோட்டம் சேவூர் துணை மின்நிலையத்திற்கு உள்பட்ட, சேவூர், ராமியம்பாளையம், அசநல்லிபாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பாங்குளம், வாலீயூர், தண்ணீர்பந்தம்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, சாவக்கட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், ஆயிரக்கணக்கான விவசாயிகள், பனியன் உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், இயந்திரப் பணிமனையாளர்கள், மோட்டார் வாகன பணிமனையாளர்கள், கிரில்ஒர்க் ஷாப்,மோட்டார் ஓர்க் ஷாப்  என ஏராளமான தொழிற்துறையினர் உள்ளனர். இப்பகுதியில் கடந்த 3 நாள்களாக மும்முனை மின்சாரம் இல்லாததால், பொதுமக்கள், தொழிற்துறையினர் பெருமளவில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அருகில் உள்ள ஐந்து ஊராட்சி பகுதிகளில் மின்மோட்டார் இயக்க முடியாமல் ஆற்றுக்குடிநீர், ஆழ்துளைக்கிணற்றுநீர் சீராக விநியோகிப்பட இயலவில்லை.  உடனடியாக சீரான மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மின்வாரியத்தினர் கூறுகையில், சேவூர் துணை மின் நிலையத்தில் டிராஸ்பார்மர் பழுதடைந்து விட்டது. சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் மும்முனை மின்சாரம் வழங்க இயலாது. தற்போது இரவு நேரத்தில் மட்டும் விநியோகிக்கப்படுகிறது. மேலும் வடுகபாளையம், கானூர்புதூர், அவிநாசி உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்பட்டு, சேவூர் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளுக்கு தற்காலிகமாக  மின்விநியோகம் செய்யப்படுகிறது. அதிலும் குறைந்த அழுத்த மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது. நான்கு நாள்களுக்குள் முழுமையாக சீரமைக்கப்பட்டு, சீரான மும்முனை மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

Tags : Saur ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...