×

காவல்துறையை கண்டித்து 2வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்

திருப்பூர்,பிப்.17:சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்யக்கோரி திருப்பூரில் நேற்று 2ம் நாளாக முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர் ஆகிய புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம்,  மனித சங்கிலி, பேரணி என தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டையில்  இஸ்லாமியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதில் பலர் காயமடைந்தனர். இச்செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரு சில மாவட்டங்களில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தை துவக்கி உள்ளனர்.  திருப்பூர் மாநகர் பகுதிக்குட்பட்பட அறிவொளி ரோடு பகுதியைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தை கடந்த 15ம் தேதி துவக்கினர். இந்த போராட்டம் 2ம் நாளாக நேற்றும் தொடர்ந்து நடந்தது.
இஸ்லாமியர்களை கொடூரமாக தாக்கிய  சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மற்றும் போலீசாரை இடை நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
இதேபோன்று பெருமாநல்லுார் ரோடு  புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சாந்தி தியேட்டர் முன் பந்தல் அமைத்து இஸ்லாமிய அமைப்பை சார்ந்த ஆண்களும், பெண்களும் தொடர் தர்ணா போராட்டத்தை நேற்று காலை முதல் துவங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு அப்பகுதியிலேயே சமையல் செய்து உணவு வழங்கப்படுகிறது. தர்ணா, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களால் திருப்பூர் மாநகர் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Muslims ,
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...