×

திம்பம் மலைப்பாதையில் டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதி விபத்து

சத்தியமங்கலம்,  பிப். 17:  திம்பம் மலைப்பாதையில் டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதி  விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள  திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டுள்ளது. தமிழகம் - கர்நாடக  மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  இம்மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் வாகனப்போக்குவரத்து நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் தமிழகத்திலிருந்து கர்நாடக  மாநிலம் செல்வதற்காக பால் டேங்கர் லாரி திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது பின்னால் வந்த லாரி 26வது கொண்டை ஊசி வளைவு  அருகே முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.  இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் நோக்கி சென்ற மற்றொரு  டேங்கர் லாரி சரக்கு லாரி மீது மோதியது. ஒரே நேரத்தில் 3 லாரிகள் மோதி  சாலையில் நின்றதால், திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. மேலும் லாரி ஓட்டுநர்களுக்கிடையே விபத்து தொடர்பாக கடும் வாக்குவாதம்  நடந்ததால் மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில்  அணி வகுத்து நின்றன. தகவலறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  போக்குவரத்தை சீர்படுத்தினர். இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கிடையே 1 மணி  நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Cargo truck crashes ,
× RELATED ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்