×

கல்லணை கால்வாய் அமைப்பின் பணிகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.300 கோடி குறித்து தெளிவான விவரம் வெளியிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

தஞ்சை, பிப். 17: கல்லணைக் கால்வாயை நீட்டித்தல், புனரமைத்தல், நவீனப்படுத்துதல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ.300 கோடி குறித்து தெளிவான விவரம் வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், திருவோணம் உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு கல்லணைக்கால்வாய் மூலம் காவிரி பாசன நீர் சென்றடைவதில் ஆண்டுதோறும் பிரச்சனைகள் இருந்து வருகிறது. கல்லணைக்கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு முழு கொள்ளளவிற்கு பாசன நீர் கொண்டு செல்வதில் நெருக்கடிகளும், சிக்கல்களும் உள்ளது.இதனால் கடைமடைப் பகுதிகளில் உள்ள விவசாயிகளால் முறையாக விவசாயம் செய்ய முடியாத நெருக்கடி நிலை ஆண்டுதோறும் ஏற்படுகிறது. கல்லணைக் கால்வாய் பாசன நீர் கிடைக்காத விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கமாகி வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு நபார்டு வங்கி உதவியுடன் ரூ.147 கோடி மதிப்பீட்டில் கல்லணைக் கால்வாயில் முதற்கட்டமாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.நபார்டு வங்கி உதவியுடன் அன்றைய மதிப்பில் ரூ.272 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் நிலைப் பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்படாமல் கைவிடப்பட்டது. மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இரண்டாம் நிலைப் பணிகள் நடைபெறவில்லை. இப்பணிகள் துரிதமாக நடைபெற்றிருந்தால் கடைமடை பகுதி விவசாயம் இன்றைய நிலையில் இருந்து பெருமளவிற்கு மேம்பட்டிருக்கும். அரசியல் காரணங்களை மையப்படுத்தி இரண்டாம் நிலைப்பணிகள் கைவிடப்பட்டது டெல்டா விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உதவியுடன் கல்லணைக் கால்வாயை முற்றிலுமாகப் புனரமைத்து, நவீனப்படுத்துவதற்காக ரூ. 2,298.75 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. கல்லணைக் கால்வாயை நீட்டித்தல், புனரமைத்தல், நவீனப்படுத்துதல் மற்றும் அதைச் சார்ந்த வாய்க்கால்களின் கரைகளைப் பலப்படுத்துதல், ஏரிகளைத் தூர் வாருதல், நீரொழுங்கி, மதகுகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த 2016 ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மத்திய நீர் வள ஆதாரத் துறையின் தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டத்தில் முதல் கட்டப் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் ஆண்டுகள் கடந்தும் இதுகுறித்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவில்லை. ஏற்கனவே நபார்டு வங்கி உதவியுடன் ரூ.272 கோடி மதிப்பில் நடைபெற இருந்த இரண்டாம் நிலைப் பணிகள் கைவிடப்பட்டதைப்போல ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உதவியில் கல்லணைக் கால்வாயைப் புனரமைத்து, நவீனப்படுத்தும் திட்டமும் கைவிடப்பட்டு விட்டதா என்ற அச்சம் டெல்டா விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கல்லணை கால்வாய் அமைப்பின் பணிகளுக்காக தற்பொது நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.300 கோடி குறித்து தெளிவான விபரங்களை அரசு வெளியிட வேண்டும். கல்லணைக் கால்வாய் மூலம் 2.27 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று, 327 கிளை வாய்க்கால்களுக்கும், 694 பாசனக் குளங்களுக்கும் சென்றடையும் வகையிலும், இப்பகுதி முழுமைக்கும் நீா்வளம் பெறத்தக்க வகையில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என இந்திய கம்யூ கட்சி மாவட்டச் செயலாளர் பாரதி வலியுறுத்தியுள்ளார்.

Tags : Communist Party of India ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்