×

குருவி சுடும் துப்பாக்கியால் போதை வாலிபர் சுட்டதில் 2 பேருக்கு குண்டு பாய்ந்தது

ஆட்டையாம்பட்டி, பிப்.13:  சேலம் அருகே, குருவி சுடும் துப்பாக்கியால்,  போதை வாலிபர் விளையாட்டாக சுட்டதில், 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே பெரியசீரகாபாடியை சேர்ந்தவர் முருகன்(43). அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம்(40). தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் ரமேஷ் (30). நண்பர்களான இவர்கள் மூவரும், பெரிய சீரகாப்பாடி பகுதியில் உள்ள தறிப்பட்டறையில் ஒன்றாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை நண்பர்கள் மூவரும் வீட்டில் இருந்தனர். அப்போது, குடிபோதையில் இருந்த ரமேஷ், கையில் வைத்திருந்த ஏர்கன் எனப்படும் குருவி சுடும் துப்பாக்கியை மற்ற 2 பேரிடம் காட்டி, விளையாட்டாக சுட்டு விடுவேன், சுட்டு விடுவேன் என கூறினார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில், துப்பாக்கியால் திடீரென சுட்டு விட்டார். இதில் முருகனுக்கு முதுகிலும், வெங்கடாசலத்திற்கு காலிலும், குண்டு பாய்ந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், குண்டடி பட்ட 2 பேரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து வெங்கடாசலம், முருகன் ஆகியோர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ரமேசுக்கு குருவி சுடும் துப்பாக்கி எப்படி கிடைத்தது? இதை அவருக்கு கொடுத்தவர்கள் யார் என கேள்வி எழுந்துள்ளது. ரமேஷ் போதையில் உள்ளதால், காலையில் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags :
× RELATED சென்னையில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது