தாரமங்கலம் அருகே கூலி தொழிலாளி மர்மச்சாவு

சேலம், பிப்.13: சேலம் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த கூலித்தொழிலாளி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி மூங்குத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (55). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து பழனிசாமி வசித்து வந்தார். அவருடன் அவரது தாய் பழனியம்மாள் (75) தங்கியிருந்தார். இதனிடையே நேற்று காலை 8.30 மணியாகியும் பழனிசாமி எழுந்திருக்கவில்லை. இதனால் பழனியம்மாள் அவரை எழுப்பினார். அப்போது அவர் இறந்திருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பழனியம்மாள் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் இதுகுறித்து தாரமங்கலம் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக பழனியம்மாள் தெரிவித்தார். அதன்படி, அவரை யாராவது கொன்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அவரது சடலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>