×

கொரோனா வைரசுக்கு மருந்து என எழுதி வைத்த கடைக்கு எச்சரிக்கை

சேலம், பிப். 13: கொரோனா வைரசுக்கு மருந்து உள்ளதாக விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.சீனாவில் ஹூபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமான நிலையங்களிலும் மருத்துவ குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பினை தடுக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சேலம் குகை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஹோமியோ மருந்தக கடையில்,கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கிடைக்கும் என பதாகையில் எழுதி தொங்கவிடப்பட்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து சேலம் மாநகர் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சுகாதார அதிகாரிகள் சென்று விசாரித்தனர். அப்போது, கொரோனா வைரசுக்கு மருந்து உள்ளதாக போலியாக எழுதி வைக்க கூடாது எனவும், இது போல் மீறி தொடர்ந்து எழுதி வைத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதையடுத்து அங்கு தொங்கவிடப்பட்ட பதாகைகளை அகற்றினர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கொரோனா வைரசுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் போலியாக யாராவது மருந்து உள்ளதாக எழுதி வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றனர்.

Tags : Shop ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...