×

அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டம்

ராசிபுரம், பிப்.13: ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து, ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்  60க்கும் மேற்பட்ட நேற்று இரவு, உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட்டில் உள்ள திருவள்ளூவர் அரசு கலைக்கல்லூரியில், சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  கல்லூரியின் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் சேலம், தர்மபுரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி, ஆத்தூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 60க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாக ஆதிதிராவிடர் நல விடுதியில் போதிய குடிநீர் வசதி இல்லை. சாப்பாடும் குறைவாகவே போடுவதாக கூறப்படுகிறது. கழிப்பிடமும் சுகாதாரமற்று உள்ளது.இதுகுறித்து விடுதி வார்டனிடம் பல முறை  புகார் தெரித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள், நேற்று இரவு உணவு சாப்பிட மறுத்து, விடுதியின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் மற்றும் காவல் துறையினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர்களின் கோரிக்கைளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் சமாதானமடைந்த மாணவர்கள், தர்ணாவை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஆதிதிராவிடர் விடுதி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Government college students ,facilities ,
× RELATED கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும்...