×

ராஜபாளையத்தில் திமுக உண்ணாவிரதம் அதிகாரிகள் உறுதியளித்ததால் தற்காலிகமாக கைவிடப்பட்டது

ராஜபாளையம், பிப்.13: ராஜபாளையத்தில் திட்டப்பணிகள் சரிவர நடைபெறவில்லை என திமுக சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ராஜபாளையம் நகரில் நடைபெற்று வந்த தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டது. இதனைக் கண்டித்தும் உடனடியாக பணிகளை தொடங்க கோரியும், ரயில்வே மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது கண்டித்தும் திமுக சார்பில் ராஜபாளையம் ஜவகர் மைதானம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தலைமையில் நடந்தது. தென்காசி எம்பி தனுஷ்.எம்.குமார் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். அப்போது அவர்களுடன் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர், நகராட்சி பொறியாளர் நடராஜ், நெடுஞ்சாலை துறை அலுவலர் பொன் முரளி, வருவாய்துறை அலுவலர் ஆய்வாளர் அழகர்ராஜ், குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ராஜாமணி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து எம்எல்ஏ தங்கப்பாண்டியன் கூறுகையில், நகரில் நடைபெற்று வரும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் ஆறு மாத காலத்தில் விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்துள்ளனர். அதேபோல் ரயில்வே மேம்பால பணிகள் தொடர்ந்து நடைபெற விரைவில் நிலம் கையகப்படுத்தி ஒப்பந்ததாரரிடம் வழங்கி விரைவில் பணி முடிவடையும். மேலும் இணைப்புச் சாலை பணிகள் விரைவில் தொடங்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக உண்ணாவிரத போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பணிகள் நடைபெறாமல் இருந்தால் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

எம்பி தனுஷ்.எம்.குமார் கூறுகையில், ``அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள கால அளவுக்குள் பணியை முடிக்காவிட்டால் ராஜபாளையம் நகரம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு திமுக போராட்டங்களை முன்னெடுக்கும்’’ என கூறினார். இப்போராட்டத்தில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ், விருதுநகர் தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் ராஜா அருண்மொழி, ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், ஷியாம் ராஜா, மணிகண்டராஜா, பேரூர் செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Rajapalayam ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்