×

சிவகங்கை அருகே கிடப்பில் சாலை பணி: அவதியில் கிராமமக்கள்

சிவகங்கை, பிப்.13: சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் இருந்து தேவினிபட்டி செல்லும் சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டதால் கிராமத்தினர் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை அருகே கிராபைட் தொழிற்சாலை இயங்கக் கூடிய கோமாளிபட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கோமாளிபட்டியில் இருந்து தேவினிப்பட்டி வழியாக தமறாக்கி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை கோமாளிபட்டி, தேவினிப்பட்டி, தென்னம்பட்டி, இடையமேலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதி கிராமங்களில் இருந்து இடையமேலூர் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை கல்லூரி செல்பவர்களும் இந்த சாலை வழியே தான் செல்ல வேண்டும்.

இந்த சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட நிலையில் முற்றிலும் சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சாலைப் பணிக்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால் பணிகள் எதுவும் தொடங்கப்பட வில்லை. மீண்டும் கடந்த ஓர் ஆண்டிற்கு முன் கோமாளிபட்டியில் இருந்து தேவினிபட்டி வரை அரை கி.மீ தூரம் ஏற்கனவே இருந்த சாலை அகற்றப்பட்டு ஜல்லிக்கற்கள் பரப்புவதற்காக சாலையோரத்தில் கற்களும் கொட்டப்பட்டன. ஆனால் அதன்பிறகு பணிகள் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தற்போது மண்சாலையாக கிடக்கிறது. சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்கள் வாகன டயர்களை பதம் பார்க்கிறது. ஆண்டுக்கணக்கில் சாலை, பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் இவ்வழியே வாகனங்களில் செல்லும் கிராமத்தினர் சாலையில் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். கிராமத்தினர் கூறியதாவது: பல்வேறு கிராமங்களுக்கு முக்கிய சாலையாக விளங்கும் இந்த சாலையை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை. பணிகள் தொடங்கி ஓர் ஆண்டு ஆன நிலையில் பணிகளை இதுவரை முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். மண் சாலையாக மாறியுள்ளதால் மழை நேரத்தில் சாலையை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் வேலாங்கப்பட்டி கண்மாய் வழி குறுக்குப்பாதையில் செல்கிறோம். இதனால் கடும் அவதியடைந்து வருகிறோம். உடனடியாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Sivagangai ,
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்