×

குறைதீர் முகாமில் மாற்றுத்திறனாளிகள் அவதி

உடுமலை, பிப். 13:  குறைதீர் முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் சிரமத்துக்கு உள்ளாயினர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களை சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமையில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இம்முகாமில் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் அட்டையை பெறவும், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மாற்றுத்திறனாளிகள் வந்தனர். நடக்க முடியாதவர்களை உறவினர்கள் அழைத்து வந்தனர். ஆதரவு இல்லாதவர்கள் அவர்களாகவே சிரமப்பட்டு நடந்து வந்தனர். சிலர் படியேறி செல்ல முடியாமல் சோர்வுடன் படிக்கட்டில் அமர்ந்து விட்டனர்.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது: எந்த வசதியும் இல்லாதவர்களுக்கு வீல்சேர் வசதி செய்திருக்கலாம். தொலைவில் இருந்து கஷ்டப்பட்டு வருபவர்கள் இதை பயன்படுத்தி இருப்பார்கள். ஒரு மருத்துவர் மட்டுமே பரிசோதனை செய்ததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்றனர். மேலும் இது தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, முகாமுக்கான ஏற்பாடுகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறைதான் செய்துள்ளனர். அவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்றனர்.

Tags : Aviva ,Camp ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு