×

தைப்பூசம் மறுபூஜை முன்னிட்டு மயில் காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை

தாராபுரம், பிப். 13:  பழனி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பாதயாத்திரையாக காவடி எடுத்து சென்றனர். ஆண்டுதோறும் தைப்பூசம் முடிந்து மறுபூஜை நடக்கும். இதற்காக சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக பழனிக்கு செல்வது வழக்கம். இதில் மயில்காவடி, பால்காவடி, இளநீர் காவடிகளுடன் பாரம்பரிய முறைப்படி வீட்டின் தலைக்கட்டுக்கு ஒரு இரட்டை மாட்டுவண்டி கட்டிவரும் இவர்கள் தைப்பூசத் விழாவையொட்டி நிறைவுநாள் மறுபூஜைக்காக ஒரு நாள் இரவு முழுவதும் பழனி மலையில் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். அதன்படி தைப்பூச திருவிழாவுக்காக கடந்த 7ம் தேதி எடப்பாடி செல்லியாண்டியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் மாட்டுவண்டி மற்றும் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு நேற்று வந்து சேர்ந்தனர். பக்தர்களுக்கு தாராபுரம் முருக பக்தர்கள் சார்பில் பாரம்பரிய முறைப்படி அலங்கியம் சாலையில் கொத்துக்காரர் வரவேற்பு அளித்தார். அங்கு மயில் காவடிகள் இறக்கி வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தாரை, தப்பட்டை முழங்க பக்தர்கள் காவடி ஆட்டம் ஆடினர். கடந்த 2நாட்களில் எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமராவதி ஆற்றில் புனிதநீராடி பாதயாத்திரையை தொடர்ந்தனர். வழி நெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Pilgrimage ,Peacock Cavalry ,
× RELATED ராகுல்காந்தி யாத்திரை நிறைவு...