×

பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

உடுமலை, பிப். 13:  உடுமலை அடுத்த திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிட்டது. உடுமலை  அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி,  திருமூர்த்தி அணை, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் உள்ளிட்டவை உள்ளன.  இவற்றை பார்வையிட தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை  நாட்கள், சபரிமலை சீசன், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மற்றும்  சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும். சபரிமலை சீசனின்போது,  தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் வந்து கோயிலில் வழிபட்டு,  பஞ்சலிங்க அருவியில் குளித்து சென்றனர்.

தற்போது பஞ்சலிங்க அருவியில்  மிதமான அளவு தண்ணீர் விழுகிறது. ஆனால் பண்டிகை கால விடுமுறை நாட்கள்  முடிந்து விட்டதாலும், பள்ளிகளில் தேர்வுகள் நெருங்கி வருவதாலும்,  சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ளது. இது குறித்து அறநிலையத்துறையினர்  கூறியதாவது: பஞ்சலிங்க அருவிக்கு தற்போது தினசரி 100 முதல் 200 பேர்  வருகின்றனர். சனி, ஞாயிறுகளில் 500 பேர் வருகின்றனர். மிதமான அளவில்  தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.  கோடை துவங்கிவிட்டதால், இன்னும் சில நாட்களில் தண்ணீர் குறைந்து அருவி  வறண்டுவிடும். அதன்பிறகு ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழையின் போதுதான்  அருவியில் தண்ணீர் கொட்டும் என்றனர்.

Tags : Visitors ,Panchalinga Falls ,
× RELATED தீவுத்திடலில் 70 நாள் நடந்த சுற்றுலா...