×

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சாக்கடையில் கலக்கும் அவலம்

கோபி, பிப்.13: கோபி அருகே பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால் காரணமாக கழிவுநீர் குடிநீருடன் கலந்து வருகிறது. கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, கோபி பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட மேல்நிலை தொட்டிகளில் நிரப்பப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் குழாய்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இந்நிலையில், நஞ்சகவுண்டன்பாளையம், பாரியூர் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அருகில் உள்ள சாக்கடையில் கலந்து வருகிறது.

சாக்கடை நீர், குடிநீர் குழாயில் உள்ள உடைப்பு வழியாக மீண்டும் குழாய் நிரம்புகிறது. இதனால், குடிநீர் விநியோகம் செய்யும் போது கழிவுநீர் கலந்தே குடிநீர் வருகிறது. இதுகுறித்து பலமுறை கூறியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக பாரியூர் சாலை, மேட்டுவலுவு, நஞ்சகவுண்டன்பாளையம், முருகன்புதூர் உள்ளிட்ட பகுதியில் கழிவுநீர் கலந்து வருவது குறித்து பலமுறை கூறியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால், பிரதான குடிநீர் குழாயின் வழித்தடத்தை ஆய்வு செய்த போது மேட்டுவலுவில் குழாய் உடைப்பு காரணமாகவே கழிவுநீர் கலந்து வருவது தெரிய வந்தது. இதுகுறித்தும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக, குழாய் உடைப்பை சரி செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது