×

குடிமகன்களின் அட்டகாசத்தால் விவசாய நிலங்களில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்கள்

அரியலூர், பிப். 13: அரியலூர் மாவட்டத்தில் நீர்நிலைகள், விவசாய நிலங்கள், சாலைகள் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து உடைந்து கிடக்கும் மதுபாட்டில்களால் விவசாயிகள், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதை தடுக்க பிளாஸ்டிக் பாட்டில்களில் மது அடைத்து விற்பனை செய்வதுடன் கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலையோரம், பள்ளி, குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. இருந்த போதிலும் சில டாஸ்மாக் கடைகள் இன்றளவும் சர்ச்சைக்குரிய இடங்களிலேயே செயல்பட்டு வருகிறது. அவ்வாறு இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அதிகாரிகள் செவி சாய்க்காததால் போராட்டம் நீர்த்து போய் மக்களும் போராடி சோர்ந்து போயினர். இதனால் பள்ளி, கடைவீதி பகுதிகளில் மது குடிவிட்டு அநாகரிகமான செய்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் ஒருபுறம் இருக்க அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்துகளில் சிக்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகிறது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கும் குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் போதுமான இடவசதிகளுடன் பார் இல்லாததால் திறந்த வெளியில் மது குடிக்க செல்கின்றனர். இதில் பெரும்பாலான குடிமகன்கள் மது குடிக்க தேர்ந்தெடுப்பது சாலையோர பகுதி, பள்ளி, கோயில் வளாகம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் நிலைகள், கொல்லை பகுதிகள், காட்டு பகுதிகளாக இருக்கிறது. அப்பகுதிகளில் நண்பர்களுடன் மது குடிப்பவர்கள் தாங்கள் மது குடிக்க பயன்படுத்திய பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், கப்புகள், வாட்டர் பாக்கெட்டுகளை அங்கேயே விட்டு செல்கின்றனர். இவைகள் காற்றில் அப்பகுதி முழுவதும் பறந்து நீர்வரத்து வாரிகளை அடைப்பதோடு சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது.
தற்போது அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ள போதிலும் ஏற்கனவே விட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே பரவி கிடப்பதை காண முடிகிறது. மேலும் இதுபோன்ற காலி மதுபாட்டில்கள் அப்பகுதியில் நடமாடும் சிறுவர்கள் கண்ணில் படும்போது சிறுவர்கள் மனதில் கெட்ட எண்ணங்கள் உருவாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் ஒரு சிலர் மதுவை குடித்து விட்டு காலியான கண்ணாடி பாட்டில்களை சாலையின் நடுவில், நீர்நிலைகள், ஊரணி படிகட்டுகள், விவசாய நிலங்கள், பஸ் ஸ்டாப் பகுதிகளில் உடைத்து எறிவதால் அப்பகுதிகளில் குழந்தைகள், முதியவர்கள் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனிடையே விவசாய நிலங்கள், நீர்நிலை பகுதிகளில் உடைத்தெறியபட்ட பாட்டில்கள் மணலில் புதைந்து போவதால் விவசாய பணிகள் மேற்கொள்ளும்போது மணலில் புதைந்த பாட்டில்கள் விவசாயிகள் உடலில் வெட்டி காயத்தை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கண்ணாடி பாட்டில்களில் மது அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களை உடைப்பது கடினம், அப்படியே உடைத்தாலும் கண்ணாடி பாட்டில்கள் போல் சிதறுவதில்லை. இதனால் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் மாசுபாடுவது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

காலி மதுபாட்டில்களை மறு சுழற்சி செய்ய அரசு முன்வர வேண்டும்: தற்போதுள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் கண்ணாடி பாட்டில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கண்ணாடி பொருட்கள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியது. அப்படி இருக்கையில் தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் காலியாக குவிந்து கிடக்கும் மதுபாட்டில்களை உடனுக்குடன் மறு சுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே டாஸ்மாக் கடை வளாகத்தை விட்டு மதுபாட்டில்களை வெளியில் எடுத்து செல்ல அனுமதிக்ககூடாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Brewery breweries ,farmland ,citizens ,
× RELATED மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு