×

எண்ணூரில் முகத்துவார ஆற்று பகுதிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவார ஆற்று பகுதிகளை மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிகாரிகளுடன் நேற்று எண்ணூர் முகத்துவாரம் பகுதிக்கு வந்து  அங்கு   கரையோர பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் படகில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் ஆணையர் பிரகாஷ் கூறுகையில், ‘‘நீர்நிலைகளை பராமரிக்க சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் 6 ஆயிரம் கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கூவம் ஆற்றில் பருத்திப்பட்டு முதல் நேப்பியார் பாலம் வரை ஆக்கிரமிப்பு செய்திருந்த சுமார் 15 ஆயிரம் பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் தங்குவதற்கான அடிப்படை வசதிகளும்,  பொருளாதார வசதிகளும் அரசால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூவம் ஆற்றில் தடுப்பு சுவர் கட்டி நதிகளை பாதுகாக்கும் வகையில் கழிவுநீர்  கூவம் ஆற்றில் கலக்காத வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பக்கிங்காம் கால்வாயில் ஒரு பகுதி, எண்ணூர் கடற்கரையில் இணைகிறது. எனவே  எண்ணூர் கடற்கரை முகத்துவார பகுதியை பயன்படுத்தும் 30 மீனவ கிராமத்தை சேர்ந்த  மீனவர்களுக்கு பயன்படும் வகையில் மணல் மேடுகளை அகற்றி  தூண்டில் வளைவு அமைப்பது, அலையாத்தி காடுகளை உருவாக்குவது மற்றும் கழிவுநீர் இப்பகுதியில் கலக்காமல் இருக்க என்ன நடவடிக்கை தேவை? என்பதை கண்டறிய ஆய்வை மேற்கொண்டுள்ளோம். மேலும் இப்பகுதியில் அதிகளவில்  தொழிற்சாலைகள் இருப்பதால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் கடலில் கலக்காமல் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படும். எண்ணூர் கடற்கரையில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தி இயற்கையை மீட்டெடுக்கும்  முயற்சியின் முதற்கட்ட பணியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.   இந்த ஆய்வின்போது திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் பால் தங்கதுரை, செயற்பொறியாளர் வேலுச்சாமி, சுற்றுசூழல் துறை, குடிநீர் வாரிய துறை  அதிகாரிகளும், சென்னை நதிநீர் மறுசீரமைப்பு அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்.




Tags : estuary river areas ,
× RELATED எண்ணூரில் முகத்துவார ஆற்று பகுதிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு