×

அரவக்குறிச்சி பகுதியில் கரும்புகையை கக்கியபடி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் அதிகாரிகள் ஆய்வு நடத்த வலியுறுத்தல்

அரவக்குறிச்சி, பிப்.13: அரவக்குறிச்சி பகுதியில் சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் கரும்புகையை கக்கிக் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி நகரம் தாலுகா தலைமையிடமாக உள்ளது. இது கரூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, தாராபுரம், கோவை போன்ற முக்கிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு இணைப்பு நகரமாகவும் உள்ளது. இதனால் டூ வீலர்கள், கார், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு சரக்கு வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன.

இவ்வாறு செல்லும் ஏராளமான வாகனங்கள் சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் கரும் புகையை கக்கிக் கொண்டு செல்லுகின்றன. இதனால் ஊரின் சுற்றுச் சூழல் பாதிப்பது மட்டுமல்லாமல், சிலசமயங்களில் சாலையில் செல்லும் பொதுமக்கள் மூச்சு விடுவதற்கு திணறும் நிலை ஏற்படுகிறது. தினமும் கரும் புகையை சுவாசிப்பதால் நுரையீரல், பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில நேரங்களில் அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு பின்னால்செல்லும் வாகனங்கள் பாதை தெரியாமல் தடுமாறுகின்றன. தற்பொழுது விற்பனைக்கு வரும் புதிய வாகனங்களில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் பரிசோதனை செய்யப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட அளவு புகை வெளிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

அதனால் பாதிப்பில்லாமல் உள்ளது. ஆனால் பழைய வாகனங்களில் சரியாக பராமரிக்கப்படாததால் கரும்புகையை வெளியிட்டபடி சாலையில் வருகின்றன. இவ்வகை பழைய வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும் என்று அரசு உத்தவிட்டுள்ளது. இருந்தாலும் புகை கக்கும் வாகனங்கள் சாலையில் சென்ற வண்ணம்தான் உள்ளது. எனவே அரவக்குறிச்சி பகுதியில் சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் கரும் புகையை கக்கிக் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,inspection ,area ,Aravakurichi ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...