×

புதுக்கோட்டை அருகே வயலில் அத்துமீறி எரிவாயு குழாய் பதிக்க முயன்ற அதிகாரிகள் மீது வழக்கு பதிய வேண்டும் விவசாய சங்கத்தினர் தீர்மானம்

புதுக்கோட்டை, பிப்.13: குலையன்கரிசலில் விளைநிலங்களில் அத்துமீறி எரிவாயு குழாய்களை பதிக்க முயன்று நெற்பயிர்களை சேதப்படுத்திய ஐஒசிஎல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வைகுண்டம் வடகால் பாசன பகுதியான குலையன்கரிசலில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வாழை, நெல் பயிரிட்டு வருகின்றனர். கடந்தாண்டு குலையன்கரிசலில் உள்ள விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் முயற்சித்தது.

இதனால் விளைநிலங்கள் பாழ்படுவதுடன் அடிக்கடி விபத்து ஏற்பட்டு விவசாயிகள் உயிரிழக்க நேரிடும் என்று குழாய் பதிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவைகளை நடத்தினர்.
நேற்று முன்தினம் ஐஒசிஎல் அதிகாரிகள் குலையன்கரிசல் புதுமடை பாசன பகுதியில் ஜெயசந்திர கனியம்மாள் என்பவரது வயலில் குழாய் பதிக்க குழிகளை தோண்டியது. இதனால் அறுவடைக்கு செய்ய இருந்த நெற்பயிர்கள் சேதமானது. தகவலறிற்து விவசாயிகள் அங்கு திரண்டதால் அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். இயந்திரங்களை சிறை பிடித்தனர்.

பயிற்சி ஏ.எஸ்.பி.ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. கலைக்கதிரவன், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் போலீசார் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். எரிவாயு குழாய்கள் பதிக்க முயன்ற இந்தியன் ஆயில் கார்பரேஷன் திட்ட மேலாளர் குருமூர்த்தி, இன்ஜினியர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிய வேண்டும் என்றனர். அவர்கள் மீது வழக்குபதியப்படும் என போலீசார் உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால் இதுவரை வழக்குப்பதியவில்லை.

இதையடுத்து நேற்று குலையன்கரிசல் விவசாய சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் விளைநிலத்தில் அத்துமீறி எரிவாயு குழாய் பதிக்க முயன்று நெற்பயிர்களை சேதப்படுத்திய இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவன அதிகாரிகள் மீது நாளை 14ம்தேதிக்குள் வழக்குப்பதிவு செய்யபடவில்லையெனில் 15ம்தேதி மாலை 5மணிக்கு  விவசாயிகள் ஒன்று திரண்டு அறப்போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் அறப்போராட்டமாக நடத்தப்படும். வருகிற 22ம்தேதி விவசாயிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நாளை 14ம்தேதி மாலை 5மணிக்கு விவசாய சங்கத்தில் மகாசபை கூட்டம் நடதத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  இக்கூட்டத்தில் குலையன்கரிசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுரேஷ், விவசாய சங்க நிர்வாகி சுபாஷ் செல்வக்குமார், யூனியன் கவுன்சிலர் ஆஸ்கார், குமாரசாமி, துரைப்பழம், ஜெகன் மற்றும் ஏராளமாக விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : farmers union ,field ,Pudukkottai ,
× RELATED விவசாயிகளின் எந்த எதிர்பார்ப்பையும்...