×

ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் புகுந்து பிடிஓவுக்கு கொலை மிரட்டல்

நாங்குநேரி, பிப். 13:  ரேஷன் கடை அமைப்பது தொடர்பாக நாங்குநேரி யூனியன் அலுவலகத்திற்குள் புகுந்து பிடிஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் பார்ப்பரம்மாள்புரம் மற்றும் பதக்கம் கிராமங்களுக்கு ரேஷன் கடை அமைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்னை நிலவி வருகிறது. இதனிடையே பதக்கம் பகுதியை சேர்ந்த சிலர் தங்களது சொந்த நிலங்களை அரசுக்கு கொடுத்து தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பார்ப்பரம்மாள்புரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் பதக்கம் கிராம மக்கள், நாங்குநேரி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பதக்கம் கிராமத்திலேயே ரேஷன் கடை அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நேற்று முன்தினம் நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் பிடிஓ குமரன் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த பார்ப்பரம்மாள்புத்தை சேர்ந்த அந்தோணிகுரூஸ் மகன் அற்புத நவரத்தினம் மற்றும் அந்தோணி விஜய் உள்ளிட்டோர், தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைப்பது தொடர்பாக பிடிஓ குமரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவதூறாகபேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிடிஓ குமரன், நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வின்ஐசக்ஞானதாஸ் வழக்கு பதிந்து அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை தேடி வருகிறார்.

Tags : Nanguneri Union ,office ,ration shop ,murder ,PDO ,
× RELATED அருப்புக்கோட்டை அருகே சுக்கில்நத்தம்...