×

மாமல்லபுரம் அருகே கோயிலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கடம்பாடி சின்னம்மன் கோயிலில், வீசப்பட்ட பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டது. மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சின்னம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து மொட்டை அடித்தும், பொங்கல் வைத்தும், வழிபட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்துகின்றனர்.இந்நிலையில், நேற்று இந்த கோயிலின் பின்புறம் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அப்போது பிறந்து ஒரு மாதமான ஆண் குழந்தை, அழுது கொண்டிருப்பது தெரிந்தது.

மேலும், அந்த குழந்தையின் அருகில் ஒரு கைப்பை கிடந்தது. அதை திறந்து பார்த்தபோது பெயர், விலாசம் இல்லாத ஒரு துண்டு சீட்டு இருந்தது. அதில், அந்த ஆண் குழந்தை ஜனவரி 31ம் தேதி திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் பிறந்துள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது.இதையடுத்து அந்த குழந்தையை அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர், தூக்கி இந்த குழந்தை யாருடையது என்று அக்கம் பக்கத்தில் விசாரித்தார். ஆனால், எந்த தகவலும் இல்லை.
தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குழந்தையை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர், செங்கல்பட்டு குழந்தைகள் நல அலுவலர் கீதாஞ்சலியை நேரில் வரவழைத்து, மீட்கப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் ஒப்படைத்தனர். மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து பச்சிளம் குழந்தையை வீசி சென்றது யார், எதற்காக விட்டு சென்றனர், தகாத உறவில் பிறந்ததா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : baby ,temple ,Mamallapuram ,
× RELATED கோயம்பேட்டில் சுற்றித்திரிந்த...