×

சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட சமுதாய கூடத்தை புதிதாக கட்டி கொடுக்க வேண்டும்

வாலாஜாபாத், பிப்.13: வாலாஜாபாத் - தாம்பரம் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட சமுதாய கூடத்தை, மீண்டும் புதிதாக கட்டி கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.வாலாஜாபாத்தில் இருந்து தாம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வாரணவாசி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் சுற்றிலும் தொள்ளாழி, மடவிளாகம், ஆம்பாக்கம், குண்ணவாக்கம், அகரம், அளவூர் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் வாரணவாசி பஸ் நிறுத்தம் வந்து, அங்கிருந்து தாம்பரம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு உள்பட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இதேபோல் காஞ்சிபுரம், தாம்பரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை மற்றும் கல்லூரி படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் சென்று வருகின்றனர்.வாலாஜாபாத்தில் இருந்து தாம்பரம் வரை உள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.

இதற்காக, சாலையோரத்தில் இருந்த பல்வேறு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. இதையொட்டி, வாரணவாசியில் செயல்பட்ட சமுதாயக்கூடமும் அகற்றப்பட்டது.இந்த சமுதாயக்கூடம் இருந்தபோது சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களது வீட்டு சுபநிகழ்ச்சிகளான நிச்சயதார்த்தம், பிறந்தநாள், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா உள்பட என பல்வேறு நிகழ்ச்சிகளை அதிக செலவின்றி, பணவிரயம் இல்லாமல் நடத்தினர். தற்போது சமுதாய கூடம் அகற்றப்பட்டதால், சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களது குடும்பத்தின் சிறுய நிகழ்ச்சிகளை நடத்த போதிய இடவசதி இன்றி தவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒன்றிய நிர்வாக நிதியில் இருந்து புதிய மேம்படுத்தப்பட்ட சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : community hall ,
× RELATED தேர்தல் பணி போலீசார் தபால் ஓட்டு போட்டனர்