×

ெசங்கல்பட்டு அருகே பரபரப்பு பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவியை புதருக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்ற பீகார் வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் ஊராட்சியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், 11 தளங்கள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த ஒரு ஆண்டாக கட்டப்படுகிறது. இங்கு ஒடிசா, பீகார், ராஜஸ்தான் உள்பட பல்வேறு வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 220 பேர், அங்கேயே தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 2 பள்ளி மாணவிகள், டியூஷனுக்கு சென்று விட்டு, கட்டுமான பணி நடக்கும் வழியாக சாலையில் நடந்து சென்றனர். அப்போது, கட்டிட பணி செய்யும் பீகாரை சேர்ந்த ராம் சர்மா (37) என்பவர், திடீரென இந்த 2 மாணவிகளின் கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவிகள், அவரிடம் இருந்து தப்பி அலறியடித்து கொண்டு வீட்டுக்கு சென்றனர்.

சிறிது நேரத்தில், அதே வழியாக, மற்றொரு பள்ளி மாணவி தனியாக நடந்து சென்றார். இதை பார்த்த ராம் சர்மா, அந்த மாணவியின் கையையும் பிடித்து இழுத்து, புதருக்குள் கொண்டு சென்றார். அந்த மாணவி, ராம் சர்மாவிடம் போராடி, அவரது முகத்தை நகங்களால் கீறி கூச்சலிட்டார். அந்த நேரத்தில், அவ்வழியாக வந்த ஒரு வாலிபர், இதை கண்டு ஆத்திரமடைந்தார். உடனே, ஆவேசத்துடன் ராம் சர்மாவை பிடித்து அடித்தார். சுதாரித்து கொண்ட ராம் சர்மா, அங்கிருந்து தப்பிவிட்டார். இதையறிந்ததும், ஊர்மக்கள் 300க்கும் மேற்பட்டோர், கட்டிடப்பணி நடந்த இடத்தில் நுழைந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கிருந்த பொதுமக்களிடம், சமரசம் பேசி, தலைமறைவாக உள்ள ராம் சர்மாவை, விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து போலீசார், அங்கு வேலை செய்யும் அனைத்து வட மாநில தொழிலாளர்களிடம் விசாரித்து, அவர்களது ஆவணங்களை சரி பார்த்து வருகின்றனர். அதில், ராம் சர்மாவின் நெருக்கமான 5 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sangalpattu ,school student ,
× RELATED சத்தியமங்கலம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி