×

பூண்டி உதவி தொடக்க கல்வி அலுவலகம் பராமரிப்பில் அலட்சியம் கரையான் அரித்து ஆவணங்கள் சேதம்

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில்  27 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவந்த, உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை முறையாக பராமரிக்காததால், முக்கிய ஆவணங்கள் கரையான் அரித்து விட்டன. இதனால், இந்த அலுவலகம் சதுரங்கப்பேட்டை பள்ளி வளாகத்தில், வகுப்பறையில் இயங்கிவருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டார வளர்ச்சி அலுவலர் வளாகங்களிலும், உதவி தொடக்க கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதேபோல், பூண்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலகம் 25 சென்ட் பரப்பில் உள்ளது.இங்கு, ஒன்றியத்துக்கு உட்பட்ட 72 பள்ளிகளின் விபரங்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் விபரங்கள், வருகைப்பதிவேடு, ஆசிரியர்களின் பணிப்பதிவேடு, மாத சம்பளம் பெறுதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.இந்நிலையில், போதிய பராமரிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாத நிலையில், ஆசிரியர்களின் ஆவணங்கள் உட்பட பல ஆவணங்களை கரையான் அரித்து சேதப்படுத்தி உள்ளது. இதனால், அலுவலகத்தை திடீரென சதுரங்கப்பேட்டை அரசு பள்ளிக்குள் மாணவர்களின் இரு வகுப்பறைகளை அலுவலகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

கல்வி அலுவலகத்தை சீரமைக்க தயார் திமுக ஊராட்சி தலைவர் தகவல்
ஊராட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் சித்ராரமேஷ் கூறுகையில், ‘’பூண்டி உதவி தொடக்க கல்வி அலுவலகம் 25 சென்ட் பரப்பில் இயங்கி வந்த நிலையில், பராமரிப்பு பணி செய்யாததால் ஆவணங்கள் மற்றும்  கட்டிட ஜன்னல், கதவுகள் சேதமடைந்து உள்ளது. இந்த உதவி தொடக்க கல்வி அலுவலக கட்டிடத்தை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் செலவு செய்து புதுப்பித்து தர மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்டு உள்ளோம். அனுமதி கிடைத்ததும், பணிகளை முடித்து உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் ஒப்படைப்போம்’ என்றார்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்கு ஒன்றிய அரசு நிதி...