×

திருவேற்காட்டில் தேவி கருமாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம் கோலாகலம்

பூந்தமல்லி : திருவேற்காட்டில் தேவி கருமாரியம்மன் கோயில் தெப்போற்சவம் நேற்று கோலாகலமாக துவங்கியது. சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் அமைந்துள்ள  தேவி கருமாரியம்மன் கோயில் 26ம் ஆண்டு பிரமோற்சவம்  கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இவ்விழாவை முன்னிட்டு தினமும் மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு விஷேச பூஜைகள் நடைபெற்று வருகிறது.
நேற்று மூன்று நாள் தெப்பம் உற்சவம் துவங்கியது. இதனையடுத்து தேவி கருமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

முதல் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். இரண்டாம் நாள் இன்று மாலையும், நாளை (14ம் தேதி) 3ம் நாள் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், 17ம் தேதி விடையாற்றி உற்சவம் நிகழ்ச்சியும், 18ம் தேதி உற்சவ அம்மனுக்கு பிரம்மோற்சவ சாந்தி அபிஷேகமும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், பூந்தமல்லி 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜி.டி. அம்பிகா, முன்னாள் அறங்காவலர்  டி.ரமேஷ்,  ஏ.கே.எஸ். குமார், ஏ.கே.எஸ். சரவணன், டி.ஜெயக்குமார் மற்றும் உபயதாரர்  சுந்தரமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் செம்பேடு பாபு, திருவேற்காடு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Devi Karumariyaman Temple ,Thiruverkadu ,
× RELATED தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் தற்கொலை: திருவேற்காடு அருகே பரபரப்பு