×

ஆர்டிஓ அதிரடி பருத்தியில் இயற்கை முறையில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்தி அதிக மகசூல் எடுக்க நடவடிக்கை

திருத்துறைப்பூண்டி, பிப். 13:திருத்துறைப்பூண்டி தாலுகாவில் சம்பா அறுவடைக்குப்பின் பெரும்பாலான பகுதிகளில் உளுந்து, பயறு மற்றும் எள் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப் பட்டுள்ளன. இப்பயிர்களில் உளுந்து மற்றும் பயறு வகைப் பயிர்கள் நஞ்சை தரிசில் உள்ள அடிமண் ஈரத்தினை பயன்படுத்தி வளர்ந்து 2 மாதங்களில் அறுவடை செய்யப்படும். எள் சாகுபடிக்கு இருமண்பாடான நிலத்தினை உழுது பண்படுத்தி விதைப்பு செய்யப்படும். இயற்கையாக கிடைக்கும் மழையினைக் கொண்டு வளர்ந்து மகசூல் தருகிறது. தண்ணீர் வசதி உள்ள இடங்களில் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து பாசனம் செய்யப்படுகிறது. வண்டல் மண் பகுதிகளில் நீர் ஆதாரம் உள்ள கிராமங்களில் பருத்தி சாகுபடியினை வேளாண் துறையின் மூலம் ஊக்கப்படுத்தப்படுகிறது. பனையூர், திருத்தங்கூர், திருவலஞ்சுழி, கோமல், பூசலாங்குடி, கீராளத்தூர், ஆண்டாங்கரை முதலிய கிராமங்களில் பருத்தி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக பருத்திக்கு நல்ல விலை கிடைப்பதாலும் இவ்வருடமும் பருத்திக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாலும் விவசாயிகள் தண்ணீர் வசதி உள்ள இடங்களில் பருத்தி சாகுபடி செய்து அதிக வருமானம் பெற வேண்டும் என வேளாண்மைத்துறை மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பருத்தி சாகுபடியில் பயிரில் சேதம் உண்டாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் காய்ப்புழுக்களின் தாக்குதலை சமாளிப்பது மிகவும் சவாலான காரியமாகும். எனவே இவ்வருடம் பருத்தி சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள் ரசாயன மருந்துகள் தெளிப்பதில் அதிக பொருள் இழப்பினை சந்திக்ககூடாது என்பதற்காக விவசாயிகளிடம் நஞ்சற்ற பருத்தி தொழில்நுட்பங்கள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தி இயற்கை முறையில் பூச்சிகள் தாக்குதலை கட்டுபடுத்தி அதிக மகசூல் எடுப்பதற்கு வேளாண்மைத்துறையின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குனர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக சுமார் 100 ஏக்கர் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள பனையூர் கிராமத்தினை தேர்வு செய்து அங்குள்ள பருத்தி விவசாயிகளை ஒருங்கிணைத்து விதைப்பிலிருந்து அறுவடை வரை உள்ள புதிய தொழில் நுட்பங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பருத்தி பயிர் வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி பயன்படுத்துவதற்கு அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது. பருத்தி சாகுபடி செய்துள்ள வயல்வரப்புகளில் மஞ்சள் வண்ணப்பூக்கள் பூக்கும் சூரியகாந்தி மற்றும் செண்டிப்பூக்களை வயல் வரப்புகளில் வளர்த்து நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தினை அதிகப்படுத்தி தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து விவசாயிகளுக்கும் சூரியகாந்தி விதை வழங்கப்படுகிறது.

இயற்கை முறையில் பயிரினை வளர்க்க மண்ப்புழு உரம் மற்றும் பஞ்சகாவ்யம் தயாரித்து பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கற்றுத்தரப்படுகிறது. இதுதொடர்பான தொழில்நுட்ப வேலைகளை ஆய்வு செய்வதற்காக திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன் பனையூர் கிராமத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி வேளாண்மை உதவி அலுவலர் சிவரஞ்சனி, உழவர் நண்பர் காமராஜ், முன்னோடி விவசாயி கம்பர் மற்றும் பல விவசாயிகளுடன் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கினார். வேளாண்மைத்துறையின் உத்வேகத்தால் திருத்துறைப்பூண்டி பகுதியில் பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது.

Tags :
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து