×

தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பிப். 17ல் ஆர்ப்பாட்டம் அனைத்து ஒன்றியம், மாநகரம், நகரங்களில் நடக்கிறது

தஞ்சை, பிப்.13: தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியம், மாநகரம் மற்றும் நகரங்களில் வரும் 17ம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தேச விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், மத்திய அரசின் மோசமான நிதிநிலை அறிக்கையை கண்டித்தும் பிப்ரவரி 12 முதல் 18ம் தேதி வரை இடதுசாரிகட்சிகளின் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக வருகிற 17ம் தேதி தஞ்சை மாவட்டத்தின் அனைத்து ஒன்றியம், மாநகரம் மற்றும் நகரங்களில் இடது சாரி கட்சிகள் ஆர்ப்பாடம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் - விடுதலை) கண்ணையன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் சேமிப்பின் ஆதாரமாக உள்ள வங்கிகளையும், ஆயுள் காப்பீட்டுக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களையும் தனி யாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். முன் எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ள வேலையின்மைக்கு முடிவுகாணும் வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். உயர்மதிப்பு பண நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழிற்சாலை மூடல்கள், இதன் விளைவாக ஏற்பட்ட வேலையிழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் நிர்ணயித்து வழங்க வேண்டும்.

கிராமப் பொருளாதாரத்தை நிலை குலைத்துள்ள விவசாய நெருக்கடிகளுக்கு தீர்வு காண தவறிய மத்திய அரசு, விவசாயக் கடன்கள் அனைத்தையும் ஒருமுறை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பொது மக்களிடம் விரிவாக எடுத்துச் செல்லவும், மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இடதுசாரி கட்சிகளின் சார்பில் நடைபெறும் இவ்வியக்கத்திற்கு பொதுமக்கள் பேராதரவு தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளனர்.

Tags : parties ,cities ,towns ,Tanjore district Demonstrations ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...