×

நாகர்கோவில் அருகே மணல் கடத்தி வந்த லாரி சிக்கியது

நாகர்கோவில், பிப்.13: நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு  மணல் கடத்தி சென்ற லாரியை தனிப்படை போலீசார் பிடித்து டிரைவர், கிளீனரை கைது செய்தனர். குமரி மாவட்ட காவல்துறை சார்பில் மணல் கடத்தலை தடுக்க சப் - இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் நேற்று அதிகாலை ஆரல்வாய்மொழி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் டிரைவர் நிறுத்தாமல் லாரியை வேகமாக ஓட்டி சென்றார். உடனடியாக சுதாரித்து கொண்ட போலீசார் லாரியை விரட்டினர். சுமார் 10 கி.மீ. தூரம் விரட்டி வந்து நாகர்கோவில் அப்டா மார்க்கெட் அருகே மடக்கினர். லாரியை சோதனையிட்ட போது திருச்சியில் இருந்து அனுமதியின்றி கேரளாவுக்கு மணல் கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் லாரி டிரைவர் மற்றும் கிளீனரை பிடித்து கோட்டாறு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இதில் டிரைவர் மேல்புறம் அருகே அண்டுகோடு பகுதியை சேர்ந்த கிரீஷ்குமார் (32) மற்றும் கிளீனர் குழித்துறை ஆலுவிளையை சேர்ந்த ஷாஜி(32) என்பதும் தெரிய வந்தது. தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது லாரிக்கு முன்னால் ஒரு கார் சென்றுள்ளது. அதில் லாரி உரிமையாளர் உட்பட 2 பேர் இருந்துள்ளனர். அவர்கள் மணல் லாரிக்கு பாதுகாப்பாக சென்றுள்ளனர். போலீசார் நிற்பது தெரிந்தால், உடனடியாக லாரி டிரைவருக்கு தகவல் கொடுத்து லாரியை ரோட்டோரமாக ஒதுக்கி விடுமாறு கூறுவது வழக்கம்.  ஆனால்  பறக்கும் படை போலீசார் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் சற்று மறைவான பகுதியில் நின்றதால் காரில் சென்றவர்கள் கவனிக்கவில்லை. இதனால் லாரி சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் லாரி உரிமையாளரை தேடி வருகிறார்கள்.

Tags : Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...