×

நாகர்கோவிலில் பண மோசடியில் கைதான ஈரான் கொள்ளையர்கள் சென்னை, திருவனந்தபுரத்திலும் கைவரிசை

நாகர்கோவில், பிப்.13 : நாகர்கோவிலில் பண மோசடியில் கைதான, ஈரான் கொள்ளையர்கள் மீது சென்னை, திருவனந்தபுரத்திலும் வழக்குகள் உள்ளதாக போலீசார் கூறினர். நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் பிளம்பிங் கடை நடத்தி வருபவர் டேவிட். நேற்று முன் தினம் மாலை காரில் வந்த ஈரான் நாட்டை சேர்ந்த 2 பேர், இரு 200 ரூபாய் நோட்டுகளையும், ஒரு 100 ரூபாய் நோட்டையும் கொடுத்து ரூ.500 ஒரே நோட்டாக தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். டேவிட், அவர்களுக்கு 500 ரூபாய் நோட்டை கொடுத்தார். அப்போது புதிய ரூபாய் நோட்டாக தாருங்கள் என கேட்டு, 2 பேரில் ஒருவன் பணம் இருந்த டேபிளில் கை வைத்தான். மற்றொருவர் மேப் ஒன்றை காட்டி, டேவிட்டிடம் வழி கேட்டார். மாறி, மாறி இருவரும் பேசி டேவிட் கவனத்தை திசை திருப்பி கண் இமைக்கும் நேரத்தில் மேஜை டிராயரில் இருந்து ரூ.10 ஆயிரத்தை அபேஸ் செய்தனர்.

அதே போல் அந்த சமயத்தில் அவரது கடைக்கு பொருட்கள் வாங்க ரூ.50 ஆயிரம் பணத்துடன் வந்த ஆசாரிபள்ளத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரிடமும் ரூபாய் நோட்டுக்களை பார்ப்பது போல் நடித்து ரூ.10 ஆயிரத்தை அபேஸ் செய்தனர்.
இருவரும் காரில் சென்ற பின்னர் தான், பணம் மாயமானது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கார் எண்ணையும் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வாகன சோதனைநடத்தப்பட்டபோது, மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட அந்த காரை போலீசார் மறித்து இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஈரான் நாட்டை சேர்ந்த மெய்சம், ரேசா என்பதும், சகோதரர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களை நேசமணிநகர் காவல் நிலையத்தில் வைத்து எஸ்.பி. நாத் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். அவர்கள் இருவரும் தான் பணத்தை ஏமாற்றி எடுத்து சென்றவர்கள் என்று டேவிட் மற்றும் செல்வக்குமார் உறுதி அளித்தனர். அதன் அடிப்படையில் டேவிட் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சுற்றுலா விசாவில் ஈரானில் இருந்து வந்தவர்கள் மும்பையில் தங்கி, அங்கிருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து விட்டு அதனை அவர்களே ஓட்டி வந்துள்ளனர்.  நாகரீகமான உடையில் இருப்பதாலும், வெளிநாட்டவராக இருப்பதாலும் ஏமாறுகின்ற மக்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் அவர்களிடம் இருந்து ஈரான் நாட்டு பணமும் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.  இருவரும் திருடும்  பணத்தை உடனடியாக ஈரான் நாட்டு பணமாக மாற்றி உள்ளனர். கடந்த நவம்பர் 26ம் தேதி இவர்கள் இருவரும் மும்பை வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மும்பையில் வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு கேரள மாநிலம் வழியாக கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். இவர்கள் திருவனந்தபுரத்தில் இது போன்று செல்போன் கடையில் கைவரிசை காட்டி உள்ளனர். சென்னையிலும் இதே பாணியில் பணத்தை அபேஸ் செய்தது தெரிய வந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை மூலம் ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : robbers ,Iranian ,Nagercoil ,Thiruvananthapuram ,Chennai ,
× RELATED ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும்...