×

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு


வேலூர், பிப்.12: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2ம் நிலை காவலர்களுக்கான பணிக்கு உடற்தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல்படை, தீயணைப்புத்துறை ஆகிய பிரிவுகளில் 2ம் நிலை காவலர்களுக்கான 8,888 காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் 3.22 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 46 ஆயிரத்து 700 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதேபோல், வேலூர் மாவட்டத்தில் 23,585 பேர் தேர்வு எழுதியதில் 3,688 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதில் ஆண், பெண் என மொத்தம் ஆயிரத்து 100 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், தேர்வு பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு அசல் கல்வி சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி வேலூர் காவலர் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள ஆண்கள் 577 பேருக்கும், பெண்கள் 190 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று அனைவரும் காவலர் மண்டபத்திற்கு வந்தனர்.எஸ்பி பிரவேஷ்குமார் மேற்பார்வையில் அவர்களின் கல்வி சான்றிதழ்களை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சான்றிதழ்கள் ஒரிஜினலா, குற்றப்பிரிவு ஏதாவது உள்ளதா எனவும் ஆய்வு செய்தனர். மேலும் தடயவியல் கைரேகை பிரிவு டிஎஸ்பி தர் தலைமையில் கைரேகையை பதிவு செய்தனர். இந்த பணி இன்று நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Physical Examination ,Integrated Vellore District ,
× RELATED இரண்டாம் நிலை போலீசாருக்கான உடல்திறன் தேர்வில் 972 பேர் பங்கேற்பு