×

இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு யூனியன் ஆர்டிஓ அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

கோவில்பட்டி, பிப். 12: இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கக் கோரி கிராம மக்கள், கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்க்காவை சேர்ந்த 12 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய 12 கிராம பஞ்சாயத்துகளான பிள்ளையார்நத்தம், ஜமீன்தேவர்குளம், வடக்குபட்டி, பிச்சைதலைவன்பட்டி, இளையரசனேந்தல், வெங்கடாசலபுரம், அய்யனேரி, அப்பனேரி, புளியங்குளம், சித்திரம்பட்டி, நக்கலமுத்தன்பட்டி, முக்கூட்டுமலை ஆகிய கிராம பஞ்சாயத்துகளை தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து அலகிலும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலும் இணைக்கக் கோரி கடந்த 50 ஆண்டாக பல்வேறு தன்னார்வ அமைப்புகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் இப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழக அரசு மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடமும் மனு அளித்து வருகின்றனர். ஆனால் நெல்லை மாவட்ட பஞ். அலுகில் உள்ள இந்த பஞ்சாயத்துகளை தூத்துக்குடியுடன் சேர்க்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் தூத்துக்குடி மாவட்ட கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடந்தபோது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளையரசனேந்தல் பிர்க்காவை சேர்ந்த 12 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் இந்த பஞ்சாயத்துக்களின் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்இளையரசனேந்தல் பிர்க்காவிற்கு உட்பட்ட 12 பஞ்சாயத்துகளையும் இணைத்து இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு, புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 12 பஞ்சாயத்துகளை சேர்ந்த கிராம மக்கள், தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கை மனுவை ஆர்டிஓ நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : headquarters ,Union RTO ,
× RELATED சோலைமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 லட்சம்