×

ஏரல் - சென்னை அரசு பஸ் திடீர் நிறுத்தம்

ஏரல், பிப். 12: ஏரலில் இருந்து சென்னைக்கு சென்று வந்த அரசு பஸ், கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வியாபார ஸ்தலத்தில் ஏரல் மூன்றாவது பெரிய வணிக நகரமாக உள்ளது. இங்குள்ள வியாபாரிகள், சரக்கு கொள்முதல் மற்றும் விற்பனை சம்மந்தமாக மதுரை, திருச்சி, சென்னை என பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். ஏரலில் இருந்து முதன்முதலில் சென்னைக்கு செல்வதற்கு அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 25 ஆண்டுகளுக்கு முன் திசையன்விளையில் இருந்து ஏரல் வழியாக சென்னைக்கு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் நல்ல வருமானத்துடன் ஓடிய நிலையில் அதன்பின் நிறுத்தப்பட்டது. பின்னர் ஏரலில் இருந்து பெருங்குளம், பண்டாரவிளை, சாயர்புரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி வழியாக சென்னைக்கு (தடம் எண் 178) பஸ், திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் ஏரலில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ.640 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தனியார் பஸ் டிக்கெட் விலையை விட குறைவாக இருந்ததால் இந்த பஸ்சில் நல்ல கூட்டம் இருந்து வந்தது. இந்த பஸ்சினால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற்று வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இந்த பஸ் திடீர் என நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த பஸ்சை மீண்டும் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநில பயணிகள் நலச்சங்க தலைவர் ஏரல் சாந்தகுமார் வெளியிட்ட அறிக்கை: ஏரல் மூன்றவாது பெரிய வணிக நகரமாக இருப்பதோடு தற்போது தாலுகா அந்தஸ்தும் பெற்றுள்ளது. ஆம்னி பஸ்கள் ஏரலில் இருந்து சென்னை செல்வதற்கு முன் முதன்முதலில் ஏரலில் இருந்து அரசு விரைவு பஸ்தான் விடப்பட்டது. ஆனால் அதன் பின் தனியார் பஸ் ஏரல் வழியாக சென்னைக்கு விடப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக இப்போது 15 பஸ்களுக்கு மேல் செல்கிறது. ஆனால் அரசு பஸ் ஒன்றே ஒன்று மட்டும்தான் ஓடிய நிலையில் அந்த பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தனியார் பஸ்களுக்கு ஆதரவாக இந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி நிறுத்தப்பட்ட ஏரல் -சென்னை அரசு விரைவு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

Tags : Eral - Chennai ,government bus stop ,
× RELATED கிராமங்களுக்கு அரசு பஸ் திடீர் நிறுத்தம்-மக்கள் புகார்