குலசேகரன்பட்டினம் கோயிலில் கொளுத்தும் வெயிலில் வரிசையில் தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்கள்

உடன்குடி, பிப். 12: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், கொளுத்தும் வெயிலில் வரிசையில் காத்திருந்து மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக செட் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், தசரா திருவிழாவிற்கு மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். மாதாந்திர செவ்வாய், வெள்ளிக்கிழமை மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் கார், வேன்களில் வந்து செல்கின்றனர். சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

கோயில் பிரகாரங்களை சுற்றி குறுகிய இடத்தில் மட்டுமே ஷெட் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனால் கூட்ட நேரங்களில் அதையும் தாண்டி பக்தர்கள் வரிசையாக வெயிலில் காத்திருக்கின்றனர். தற்போது கோடைபோல் வெயில் கொளுத்தி வரும் நிலையில், கோயிலை சுற்றியுள்ள கடைகளின் முன்புறமும் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இருப்பதால் பக்தர்கள்கூட ஒதுங்கிச் செல்ல முடியாத நிலை உள்ளது. நேற்று தை மாத கடைசி செவ்வாய் என்பதால் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் குவிந்தனர். இதனால் நீண்டவரிசை காணப்பட்டது. எனவே பக்தர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தற்காலிக செட் அல்லது மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

Related Stories:

>