×

நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய சாக்கு பை இல்லை

காரைக்குடி, பிப். 12:  சிவகங்கை மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய சாக்கு இல்லாததால் விவசாயிகள் நெல்லுடன் பனி, வெயிலில் காத்து கிடக்க வேண்டிய அவலம் தொடர்கிறது. மேலும் எடையிலும் மோசடி செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் 45 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அங்குள்ள பணியாளர்கள் சுத்தப்படுத்தி, 40 கிலோ கொண்ட சாக்கு பைகளில் கட்டி வைப்பார்கள். ஒவ்வொரு மையத்துக்கும் 10 ஆயிரம் சாக்கு பைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் இதுவரை மையங்களில் சாக்கு பைகள் பற்றாக்குறையே நிலவி வருகிறது. இதனால் ஒவ்வொரு மையங்களிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூடைகளை கொள்முதல் நிலையங்களில் வழங்க முடியாமல் விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். இதுபோன்று மாவட்டம் முழுவதும் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூடைகள் கொள்முதல் நிலையங்களில் வழங்க முடியாமல் சாக்கு பைக்காக காத்திருக்கிறனர். அதேபோல் எடை போட ரூ. 5 மட்டுமே வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ. 27 வரை வாங்குவதாகவும், 40 கிலோ எடைக்கு பதில் 41.50 கிலோ என ஒன்றரை கிலோ அதிகமாக அளப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கூறுகையில், ‘கொள்முதல் நிலையங்களில் போதிய சாக்கு பை அரசு சப்ளை செய்யவில்லை. இதனால் விவசாயிகள் நெல் மூடைகளுடன் பனி, வெயிலில் பல நாட்கள் காத்திருகின்றனர். சாக்கு பை இல்லாததால் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூடைகள் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்க முடியாத நிலை தொடர்கிறது. கூலி என்ற பெயரில் வசூல் செய்யக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் எடை போட ரூ,27 வரை கூலி வாங்குகின்றனர். 40 கிலோ எடைக்கு பதில் ஒன்றரை கிலோ அதிகமாக எடை போட்டு எடுக்கின்றனர் என பல்வேறு புகார்கள் வருகிறது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தேவையான சாக்கு பைகள் வாங்கி விவசாயிகளை காத்திருக்க வைக்காமல் கொள்முதல் செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : paddy buying centers ,
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...