×

அக்கறை காட்டுமா அரசாங்கம்? அடிப்படை வசதிக்கு ஏங்கும் அரசு பள்ளிகள்

இளையான்குடி, பிப்.12: இளையான்குடி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் அரசுப் பள்ளிகள், நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அரசாங்கம் அக்கறை காட்ட தயங்குவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இளையான்குடி ஒன்றியத்தில், 64 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளும், 21 அரசு நடுநிலைப் பள்ளிகளும், 3 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், ஒரு அரசு தொடக்கப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலும் கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகளே படிக்கும் இந்த அரசுப் பள்ளிகளில், அடிப்படை வசதிகளே இல்லை. போதிய வகுப்பறை கட்டிடங்கள், மாணவ, மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானங்கள், ஆய்வக கட்டிடம் உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகளும், உடற்பயிற்சி சாதனங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவைகளும், இந்த பள்ளிகளில் எட்டா கனியாகவே உள்ளது. மேலும் குடிநீர் வசதி என்ற பெயரில், சில பள்ளிகளில் உப்புத் தண்ணீரை சப்ளை செய்யும் கொடுமையும் அரங்கேறி வருகிறது. தனியார் பள்ளிகளை தேடிச் செல்லும் பெற்றோர்கள், அரசுப் பள்ளிகளை நாடிவருவதில்லை, காரணம் கட்டமைப்பு வசதிகள், மாணவர் மத்தியில் கற்பித்தலில் ஆர்வத்தை தூண்டும் அணுகுமுறைகள்தான். வரும் காலத்தில் அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையும், பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற, தயக்கம் காட்டாமல், அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சமூக ஆர்வலர் பழனி கூறியதாவது: ஏதோ கடமைக்கு கிராமப்புற பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தமிழக அரசு, தரம் உயர்த்தியுள்ளது. ஆனால் அதற்குத் தேவையான வசதிகள் இல்லை. சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் மரத்தடி நிழலில் வகுப்பறை நடைபெறுகிறது. சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. அதனால் அரசுப் பள்ளிகளை பெற்றோர்களே விரும்புவதில்லை. அதனால் அரசுப் பள்ளிகளை தனிக்கவனம் செலுத்தி முன்னேற்ற அரசு முன்வர வேண்டும் என்றார்.

Tags : Government schools ,
× RELATED அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்