×

கப்பலூர் நான்குவழிச்சாலையில் சர்வீஸ் ரோட்டில் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து அபாயம்

திருமங்கலம், பிப்.12: திருமங்கலம் கப்பலூரில் நான்குவழிச்சாலை சர்வீஸ்ரோட்டில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும் நெல்மூட்டை லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உண்டாகி வருகிறது.
திருமங்கலம் கப்பலூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் திறந்தவெளி கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கிற்கு மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்ய தேவையான அரிசிகளுக்கான நெல்மூடைகள் இறக்கிவைக்கப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து அறவை மில்களில் நெல் அரைக்கப்பட்டு அரிசி மூடைகளாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பிவைப்பது வழக்கம். தற்போது தைமாதம் நடைபெறுவதால் தென்மாவட்டங்களிலிருந்து பல்வேறு பகுதிகளில் விளைந்த நெல்மூடைகள் ஏற்றிய லாரிகள் நூற்றுக்கணக்கில் இந்த குடோனுக்கு வரத்துவங்கியுள்ளன. திறந்தவெளி கிடங்கில் இடம் போதுமான அளவு இல்லாததால் மூடைகளை ஏற்றிவரும் லாரிகள் வரிசையாக நான்குவழிச்சாலை சர்வீஸ்ரோட்டில் நிறுத்திவைக்கப்படுகின்றன. திருமங்கலத்திலிருந்து மதுரை பெரியார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் டவுன்பஸ்கள், ஆட்டோ, டூவீலர் உள்ளிட்டவைகள் சர்வீஸ்ரோட்டில் செல்வது வழக்கம். தற்போது வரிசையாக சர்வீஸ் ரோட்டில் நிறுத்திவைக்கப்பட்ட லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. டவுன்பஸ்கள் சர்வீஸ் ரோட்டினை பயன்படுத்த முடியாமல் நான்குவழிச்சாலையை பயன்படுத்த துவங்கியுள்ளன. நான்குவழிச்சாலையில் டவுன்பஸ்கள் ஸ்டாப்பில் நிற்கமுற்படும் போது பின்னால் படுவேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம் உண்டாகிவருகிறது. எனவே நுகர்பொருள் வாணிபகிடங்கிற்கு வரும் லாரிகளை சர்வீஸ்ரோட்டில் நிறுத்தாமல் கிடங்கிற்கு பின்புறமுள்ள காலியிடங்கள் நிறுத்தினால் இந்த பகுதியில் நெரிசல் குறைவதுடன் விபத்துகள் தவிர்க்கப்படும் என வாகனோட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Truck accident ,Service Road ,Kapoor Fourth Road ,
× RELATED நெற்குன்றம் அருகே சொகுசு காரில் கடத்திய 1 டன் குட்கா பறிமுதல்