×

தைப்பூச திருவிழா

பழநி, பிப். 12: பழநி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை இரவு சண்முகநதிக்கு சேலம் எடப்பாடி பக்தர்கள் வருகின்றனர். பழநி தைப்பூச திருவிழாவிற்கு வருகை தரும் பிரசித்தி பெற்ற காவடி குழுக்களில் சேலம் மாவட்டம், எடப்பாடி  பருவத ராஜகுல தைப்பூச காவடிகள் ஒன்றாகும். கடந்த 350 ஆண்டுகளுக்கு மேலாக பருவத ராஜகுல காவடி குழுவினர் பழநி கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இக்குழுவினருக்கு மட்டுமே இரவு நேரமும் பழநி மலைக்கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இக்குழுவினர் தைப்பூசம் முடிந்த பின்னரே பழநி கோயிலை வந்தடைவர். இக்குழுவினர் நாளை நள்ளிரவு மானூர் ஆற்றங்கரைக்கு வர உள்ளனர்.நாளை மறுதினம் சண்முகநதி ஆற்றங்கரையில் குளித்து முடித்து விட்டு அன்று முழுவதும் மலைக்கோயிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு படைத்து வழிபாடு நடத்துவர். பின், அப்பஞ்சாமிர்தத்தை காவடிக்குழுவினர் பகிர்ந்து கொள்வர். தற்போது சேலம் மாவட்டம் வலசைபழைய பேட்டை, புதுப்பேட்டை, கவுண்டம்பட்டி, சின்னமணலி, இடைப்பாடி, க.புதூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த காவடி குழுவினர் பழநிக்கு வருவர். இவர்கள் கல்லம்பாளையம், எல்லப்பாளையம், ஈரோடு, பரமத்திபேலூர், காவேரியாறு, காங்கேயம், வட்டமலை, சென்னிமலை, நொய்யலாறு, நல்லிமடம், தாராபுரம் வழியாக பழநி அருகே மானூர் சண்முகநதி ஆற்றுக்கு சுமார் 250 கிலோமீட்டர் பாதயாத்திரையாக வருவர்.

சண்முகநதியில் குளித்து முடித்த பின் சிவப்பு, மஞ்சள், நீல நிற குடைகளை ஏந்தி மயில் காவடி, இளநீர் காவடிகளுடன் காவிநிற ஆடை அணிந்து வருவர். மலைக்கோயிலில் தங்கி சாயரட்சை பூஜை, ராக்கால பூஜை உள்ளிட்டவைகளில் பங்கேற்பர். இந்த ஆண்டு சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழுவினர் 1 லட்சம் மலை வாழைப்பழம் மற்றும் வெல்லச்சர்க்கரை, நெய், கற்கண்டு, ஏலக்காய், பேரீச்சை ஆகியவற்றைப் பயன்படுத்தி சுமார் 10 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரித்து சாமிக்கு படைத்து வழிபாடு நடத்துவர்.  எடப்பாடி பக்தர்கள் ஊருக்கு திரும்பிச்செல்ல சேலம் மாவட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயில் நிர்வாகம் சார்பில் சண்முகநதி ஆற்று பகுதியில் முடி காணிக்ககை மற்றும் கழிப்பிட வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Taupoosa Festival ,
× RELATED பிப்ரவரி 8-ம் தேதி தைப்பூச திருவிழாவை...