×

வேளாண்துறையினர் அட்வைஸ் குஜிலியம்பாறையில் தொழுநோய் விழிப்புணர்வு

குஜிலியம்பாறை, பிப். 12: குஜிலியம்பாறை வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கம்பன் வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் வினாடி- வினா போட்டி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமர வெங்கடேசன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தனர்.முகாமில் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகளிடம் விளக்கி பேசினர். தொடர்ந்து தொழுநோய் குறித்த விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்தும், கொரோனா வைரஸ் வராமல் தடுப்பது குறித்தும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விளக்கி பேசினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ், ஆசிரியர் சந்திரக்குமார், சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குரங்கில் இருந்து பிறந்தானா...
குரங்கை மனிதன் பெற்றானா..?
‘குரங்கில் இருந்து பிறந்தானா..குரங்கை மனிதன் பெற்றானா..யாரை கேள்வி கேட்பது டார்வின் இல்லையே’ என்ற பாடல் வரிகளை தமிழ் திரைப்படம் ஒன்றில் கேட்டிருப்போம். இவை சாதாரண வரிகள் அல்ல. உலகில் உயிரினங்களை இறைவன்தான் படைத்தான் என்ற நம்பிக்கையையே புரட்டிப்போட்ட சார்லஸ் டார்வினின் ‘பரிணாம வளர்ச்சி கொள்கையின்’ சிறு சாராம்சம் ஆகும். அந்த சார்லஸ் டார்வினின் பிறந்தநாள்தான் இன்று.
சார்லஸ் டார்வின் 1809ம் ஆண்டு பிப்ரவரி 12ம் நாள் இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி எனும் இடத்தில் பிறந்தார். சிறு வயதியில் இருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது.  
தமது 22ம் வயதில் இறையியலில் பட்டம் பெற்ற டார்வின் கிறிஸ்தவ திருச்சபையில் உறுப்பினராகச் சேர மறுத்துவிட்டார்.
அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோ என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின். அவர் மூலமாக கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோர பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் தலைமையில் செல்லவிருந்த அந்த பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர். ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.
ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது. இந்த பயணத்தில் காணக்கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கு இடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தார். இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளை புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியது. “உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது.
இந்த ஆய்வின் பயனாக டார்வினுக்குத் தோன்றியதே ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’ ஆகும். 1859ம் ஆண்டு இக்கொள்கையை டார்வின் ஒரு புத்தகமாக வெளியிட்டார். “The Origin of Species by Natural Selection” அதாவது ‘இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்’ என்ற அந்த புத்தகம் கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. ‘‘உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை மட்டுமே நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும். இது புதிய இனங்களின் உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும்’’ என்பதே டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கையின் சாராம்சம். மேலும் இக்கொள்கையின்படி மனிதன் குரங்கில் இருந்துதான் தோன்றினான் என்ற கருத்தும் டார்வினால் முன்வைக்கப்பட்டது.
கடவுள்தான் மனிதன் மற்றும் பிற உயிரினங்களை படைத்தார் என்று அக்காலத்தில் பலமாக நம்பப்பட்டு வந்த நிலையில், டார்வினின் இந்த கருத்து பெரும் புயலை கிளப்பியது. தேவாலயங்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும் அவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரும் மதிப்புடையவையாக உள்ளன. இவ்வாறு மனிதனின் பிறப்பையே கேள்விக்குள்ளாக்கிய சார்லஸ் டார்வின் 1882ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் காலமானார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவரது கருத்துக்களை முன்வைத்து இன்றும் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்