×

சேலம் வழியாக சென்ற ரயில்களில் ஓசி பயணம்செய்த 4086 பேர் சிக்கினர்

சேலம், பிப்.12:சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில், டிக்கெட் இன்றி பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து, கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர்அடங்கிய குழுவினர் கடந்த மாதம் சேலம் வழியாக சென்ற எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், டிக்கெட் இன்றி பயணம் செய்த  4086 பேர்  சிக்கினர். இவர்களிடம் இருந்து ₹18.94 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், ‘ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தண்டனைக்குரியது. அவர்களிடமிருந்து இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்,’ என்றார்.

Tags : Ossi ,Salem ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை