×

நீடாமங்கலம் வேளாண். அறிவியல் நிலையத்தில் பயறுவகை பயிர்களின் உற்பத்தி அதிகரிக்க தொழில்நுட்ப பயிற்சி

நீடாமங்கலம், பிப். 12: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயறுவகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பம் குறித்த பயிற்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில் தொகுப்பு முதல் நிலை செயல்விளக்கத்திடல் மூலம் பயறுவகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க நீடாமங்கலம் வட்டாரத்தில் தேவங்குடி மற்றும் வெள்ளக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார். மண்ணியல்துறை உதவி பேராசிரியர் அனுராதா பேசுகையில், இரண்டு முறை நன்கு உழவு செய்தபின்னர் ஒரு ஏக்கருக்கு தொழு உரம் 5 டன் இடவேண்டும். ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோ டெர்மாவிரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்யவும் அல்லது ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் விதையை எடுத்துக்கொண்டு 20 கிராம் ரைசோபியம் உயிர் உரத்துடன் ஆறிய அரிசி கஞ்சியில் உலர்த்தியபின் விதைக்கலாம் என்றார்.

உழவியல்துறை விஞ்ஞானி ராஜேஸ்குமார் பேசுகையில், விதைகளை 30க்கு 10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால் அறுவடைக்கு முதல் 10 நாட்கள் இருக்கும் போது விதைகளை மண்ணில் தூவ வேண்டும். தூவும் போது மண்ணில் ஈரப்பதம் சரியாக இருக்கமாறு பார்த்துக்கொள்வது அவசியம். வரப்பு ஓரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். இறவை பயிராக இருந்தால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 44 கிலோ மணிச்சத்து 33 கிலோ பொட்டாஸ் இட வேண்டும். ஏக்கருக்கு டிஏபி 4 கிலோ உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து பூக்கும் தருணத்தில் இலைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும். மற்றும் 15நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை அளிக்க வேண்டும்.

அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட பயறு அதிசயம் ஏக்கருக்கு 2 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து 50 சதம் பூக்கும் தருணத்தில் இலைத் தெளிப்பானாக தெளிக்க வேண்டும்.விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த்தண்ணீர் மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும். கால நிலை மாற்றம் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கட்ட வேண்டும். பயிரின் எல்லா நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் ஏக்கருக்கு ஒரு கிலோ பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும். களை முளைப்பதற்கு முன் தெளிக்க கூடிய களைக்கொல்லியான பென்டிமெத்தலின் பாசன நிலையில் ஏக்கருக்கு 1.3 லிட்டரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பின்பு 20ம் நாளில் ஒரு முறை களை எடுக்க வேண்டும். அல்லது களை முளைத்தபின் தெளிக்கும் களைக்கொல்லியான குயில்பாப் இதைல் ஏக்கருக்கு 20 கிராம் விதைத்த 15, 20 நாளில் தெளிக்க வேண்டும் என்றார். பயிற்சியில் 50 விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு பச்சை பயிறு, உளுந்து, ரைசோபியம் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கப்பட்டது.

Tags : Science Center ,
× RELATED புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள்...