×

திருத்துறைப்பூண்டி நகராட்சி தெருக்களில் ஆக்கிரமிப்பு உடனே அகற்ற வேண்டும் கலெக்டருக்கு மனு

திருத்துறைப்பூண்டி, பிப். 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகளில் மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறுகிறது, அகற்றிய பிறகு ஒரு மாதத்தில் ஆக்கிரமிப்பு பெருகி விடும் என்பது அனைவருக்கும் தெரிந்து ஒன்று. இதனால் பொதுமக்கள் தினம் தினம் படும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல. மேலும் நகரத்தின் உட்பகுதிகளிலும் ,தெருக்களிலும் அதிகமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் முதன்மை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது வாகனங்கள் மாற்று வழியில் செல்ல முடியவில்லை. அவசர காலங்களில், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்லமுடியவில்லை.

குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு பெரியநாயகிபுரத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டபோது தீயணைப்பு வாகனம் செல்ல முடியாமல் 43 வீடுகள் எரிந்து முற்றிலும் சாம்பலானது, இதற்க்கு முக்கிய காரணம் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான். நகராட்சி நிர்வாகத்திடம் கட்டிட வரைபட அனுமதி பெற்று, கட்டும் போது சட்டத்திற்கு விரோதமாக வீடுகள், கடைகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. சில கட்டிடங்கள் அனுமதி பெறாமலேயே கட்டப்பட்டுள்ளது. எனவே அனுமதி பெறாமலும், சட்டத்திற்கு விரோதமாகவும் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.. மேலும் முதலில் பெரிய நாயகிபுரம் தெருவில் இப்பணியினை உடன் தொடங்க கேட்டுக்கொள்வதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,streets ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...