×

மன்னார்குடி நகராட்சியில் கடை வாடகை உயர்வை திரும்பபெற வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம்

மன்னார்குடி, பிப். 12: மன்னார்குடியில் நகராட்சி கடை வாடகை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாளை(13ம் தேதி) உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான 252 வணிக வளாகங்களுக்கான வாட கையை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி 2 வருடங்கள் முன் தேதியிட்டு பன்மடங்கு உயர்த்தப்பட்டது. மேலும் திடக்கழிவு மேலாண்மைக்கு என முறையாக கணக்கீடு செய்யாமல் ஒழுங்கற்ற முறையில் கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்தும் அறிவிப்பு வெளியிட் டுள்ளது. நகராட்சியின் இத்தகைய அறிவிப்பு வணிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நகராட்சியின் இத்தகைய வணிகர் விரோத செயலை கண்டித்து கடந்த மாதம் 28ம் தேதியன்று வர்த்தக சங்கம் சார்பில் சுமார் இரண்டாயிரம் வணிகர்கள் பங்கேற்ற பேரணியும், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்தபடி கடை வாடகை உயர்வு மற்றும் இரண்டு வருடங்கள் முன் தேதியிட்டு நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக கட்ட வலியுறுத்தி கடைகளுக்கு நேரில் சென்று நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். மேலும் நிலுவை தொகை குறித்து முறையான ரசீது கூட கொடுக்காமல் துண்டு காகிதங்களில் நிலுவை தொகையை குறிப்பிட்டு உடனடியாக கட்ட வலி யுறுத்துகின்றனர். அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகளால் வர்த்தகர்கள் வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மன்னை வர்த்தக சங்கத்தின் அவசர கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வர்த்தக சங்க தலைவர் பாரதிஜீவா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் வர்த்தக சங்க பொதுச்செயலாளர் ஆர்.வி.ஆனந்த், உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்எம்டி கருணாநிதி, வணிகர் நலச்சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் பைங்காநாடு ஞானசேகரன், நகராட்சி கடை வியாபாரிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சேரமணி, நகராட்சி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் கைலை ஊமைத்துரை ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

கூட்டத்தில், மன்னார்குடியில் நகராட்சி கடைகளின் முன் தேதியிட்ட வாடகை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், நகராட்சியில் போலி கையெழுத்திட்டு காசோலை மோசடியில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(13ம் தேதி) வர்த்தக சங்கத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நகராட்சி அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : municipality ,Mannargudi ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்