×

முத்துப்பேட்டை பகுதி குளங்களில் தீவன கழிவு பொருட்கள் கொட்டுவதை தடுக்க வேண்டும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் விசி கட்சியினர் மனு

முத்துப்பேட்டை, பிப். 12: முத்துப்பேட்டை பகுதி குளங்களில் மீன் பாசி குத்தகைதாரர்கள் தீவன கழிவு பொருட்களை கொட்டுவதை தடுக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு கொடுத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் வெற்றி தலைமையில் நகர செயலாளர் குணாகண்ணதாசன், ஒன்றிய செயலாளர்கள் மீனாட்சிசுந்தரம், ஈழராஜா உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானவர்கள் சென்று முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜிடம் மனு கொடுத்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட குளம் குட்டைகளுக்கான மீன் பாசி குத்தகைக்கு ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மீன் பாசி ஏலம் எடுப்பவர்கள் குளம் குட்டைகளில் வளர்ப்பு மீன்களை விட்டு அதில் லாபம் பார்ப்பதற்காக தீவனம், கழிவு பொருட்களை பயன்படுத்தி வருவதால் தண்ணீர் மாசுபடுவதோடு ஏழை எளியவர்கள் குளத்தில் குளிக்கும் போது அரிப்பு நோய்கள் பரவும் அபாய சூழ்நிலை உள்ளது.

எனவே ஏலம் எடுப்பவர்களை தீவனம், கழிவு பொருட்களை கண்டிப்பாக கொட்ட கூடாது என்றும், வளர்ப்பு மீன்களை விட்டு தண்ணீரை மாசுபடுத்த கூடாது என்றும், அதில் உள்ளவைகளை மட்டும் லாபம் ஈட்டலாம் எனவும் அப்படி மீறுபவர்கள் குளம் ஏலம் ரத்து செய்யப்படும் என பொதுமக்கள் நலன் கருதி அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட செயல் அலுவலர் தேவராஜ் சம்பந்தப்பட்டவர்களிடம் அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார்.

Tags : panchayat activist ,spills ,
× RELATED வடக்கு பொலிவியாவில் கொட்டித் தீர்த்த...