×

பட்டணத்தில் குறைகேட்பு அமைச்சரிடம் மனு கொடுப்பதற்காக 9 மணி நேரம் காத்து கிடந்த மக்கள்

ராசிபுரம். பிப்.12:  ராசிபுரம் அருகே பட்டணம் பகுதியில் குறைகேட்ட அமைச்சரிடம் மனு கொடுப்பதற்காக காலை முதல் மாலை வரையிலும் மக்கள் கால் கடுக்க பரிதாபத்துடன் காத்திருந்தனர். தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா நேற்று ராசிபுரம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவர், கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொணடர்.
அப்போது, பட்டணம் பேரூராட்சி பகுதி மக்களிடையே காலை 11 மணிக்கு அமைச்சர் குறைகேட்க வர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, காலை 10 மணி முதலே பொதுமக்கள் கைகளில் கோரிக்கை மனுக்களுடன் பட்டணம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு அமைச்சர் வந்து சேரவில்லை.

அதேவேளையில், மனம் தளராத மக்கள் 11 மணியை தாண்டியும் அமைச்சருக்காக காத்திருந்தனர். அப்போதும், அமைச்சர் வந்தபாடில்லை. முற்பகல், நண்பகலை தாண்டி பிற்பகல் நேரம் கடத்தும் அமைச்சர் வராததால் மனுக்களுடன் காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் ஆர்வத்தில் சிலர் சாப்பிடக் கூட செல்லாமல் காத்திருந்தனர். அவர்களில் சிலர் அங்கேயே படுத்து விட்டனர். இதையடுத்து, ஒரு வழியாக மாலை 6 மணியளவில் அமைச்சர் சரோஜா வந்து சேர்ந்தார். பின்னர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்து விட்டு வருவதற்கு தாமதாகி விட்டதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மக்கள் அதிருப்தியுடன் கலைந்து சென்றனர். அமைச்சரிடம் மனு  கொடுப்பதற்காக காலை முதல் மாலை வரையிலும் சுமார் 9 மணி நேரம் மக்கள் கால்கடுக்க காத்திருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Tags : city ,Minister of Corruption ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...