×

விழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் வழங்க குறைந்த விலையில் செடிகள் விநியோகம்

கிருஷ்ணகிரி, பிப்.12: விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு வழங்க குறைந்த விலையில் செடிகள் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒரு மரமானது தனது ஆயுட்காலத்தில் சுமார் 1 முதல் 1.6 ஜிகா டன் அளவு கார்பன்டை ஆக்ஸைடை உட்கிரகித்து ஆக்ஸிஜனை தருகிறது. சமீப காலமாக விழாக்கள், பண்டிகைகள், திருமண நிகழ்ச்சிகளின் போது, மரக்கன்றுகள் மற்றும் பழக்கன்றுகள் வழங்குவது பிரபலமடைந்து வருகிறது. எனவே, விழாக்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் மற்றும் பழச்செடிகள் தரும் பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நடப்பாண்டில் தோட்டக்கலை துறை சார்ந்த நடவுச் செடிகள் மற்றும் பழச்செடிகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் வழங்கி வருகிறது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள பண்ணைகளில் நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற பாரம்பரிய பழக்கன்றுகளும், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மரவேம்பு, புங்கன், தேக்கு மற்றும் சவுக்கு போன்ற மரங்களும், மல்லிகை, வெட்சி மற்றும் அரளி போன்ற பூச்செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இது போன்ற நடவுச்செடிகள் தவிர, பல்வேறு பழக்கன்றுகள் மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களின் நடவு செடிகள் விருப்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்தும் வழங்கப்படும். அரசு தோட்டக்கலை பண்ணைகளில் அழகுச் செடிகள் ₹5 முதல் ₹10 வரையிலும், வேம்பு, புங்கன் போன்ற மரச்செடிகள் ₹10 முதல் ₹20 வரையிலும், பழச்செடிகள் ₹8 முதல் ₹60 வரையிலும், மலர்செடிகள் ₹48 முதல் ₹30 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டதத்தின் மூலம் கிருஷ்ணகிரி அடுத்த திம்மாபுரம் மற்றும் ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணைகளின் மூலம் இவ்வாண்டு மட்டும் 18,500 மரக்கன்றுகள் மற்றும் பழக்கன்றுகள் சுப நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தையோ அணுகி, இத்திட்டத்தின்கீழ் பயனடைய முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர இ-தோட்டம் செயலி வாயிலாகவும் நேரடியாக பண்ணைகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : festivals ,
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...