×

அரசு அருங்காட்சியகத்தில் மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி

கிருஷ்ணகிரி, பிப்.12: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகள் 80 பேருக்கு குறுகியகால கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஸ்ரீவிஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவிகள் 80 பேருக்கு, இரண்டு நாள் குறுகிய கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்றை எழுத ஆதாரங்கள் முக்கியமானவை, அந்த ஆதாரங்களில் முக்கியமானதாக கருதப்படும் கல்வெட்டுகளை கொண்டு வரலாறு எவ்வாறு எழுதப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.

பயிற்சியின் முதல் நாளில் தமிழி என்றழைக்கப்படும் தொல் தமிழ் வரிவடிவ எழுத்துக்களை எழுத படிக்க பயிற்சி அளித்து, அத்தமிழி எழுத்திலிருந்து ஒவ்வொரு நூற்றாண்டாக எவ்வாறு எழுத்துக்கள் மாற்றமடைந்து, தற்போதைய தமிழ் எழுத்துக்களானது என்பதை ஆதாரங்களுடன் விளக்கினார். இரண்டாம் நாளில் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கி.பி.15ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர கால கல்வெட்டை படியெடுத்து அக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை படித்து, அவற்றின் பொருளை அறிந்துகொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவில், மாணவிகளுக்கு காப்பாட்சியர் சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை தலைவரான சரவணன், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர்கள் ரம்யா, பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Government Museum ,
× RELATED அனைத்து மாணவர்களுக்கும் இலவச...