×

அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி ஓய்வூதியர் சங்கம் தஞ்சையில் 17ல் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப்.12: அரசு போக்குவரத்துக் கழக நிதி நெருக்கடிக்கு சட்டமன்ற கூட்ட தொடரில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி வரும் 17ம் தேதி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏஐடியூசி ஓய்வூதியம் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் - நாகை கழகங்களில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி ஓய்வூதியர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் தஞ்சை மாவட்ட ஏஐடியூசி கூட்ட அரங்கில் சங்க தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் அப்பாத்துரை நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் டீசல், டயர் உள்ளிட்ட உதிரி பாகங்களின் விலை உயர்வு, கிராமபுற சேவை உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கான 100 சதவீத இலவச பயண சேவை வரை அன்றாடம் வரும் வருவாய்க்கும், ஏற்படுகிற செலவினங்களுக்கும் இடைவெளி பெரிதாகி கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதனால் பணியில் இருப்பவர்களுக்கு மாத சம்பளம் கொடுப்பது முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் வரை ஆண்டு கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. இத்தகு மோசமான பொருளாதார நிதி நெருக்கடியில் இருந்து போக்குவரத்து கழகங்களை மீட்டெடுக்க நடைபெறும் சட்டமன்ற கூட்ட தொடரில் மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது போன்று அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் சட்டமன்ற கூட்ட தொடர்களில் தொடர்ந்து நிதி ஒதுக்கவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று நடத்தவும், தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடிக்கவும், 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்தி வரும் 17ம் தேதி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், கவுரவத் தலைவர் சந்திரமோகன், நிர்வாகிகள் வெங்கடபிரசாத், பீர்தம்பி, அருள்தாஸ், தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.துணை செயலாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.

Tags : State Transport Corporation ,AITUC Pensioners Association ,
× RELATED முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை...