×

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்

தஞ்சை, பிப்.12: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து அமைதியாக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இ.கம்யூ) மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன் வைத்தும், மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சி செய்து வரும் மத்திய அரசை கண்டித்தும் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

இந்த அறிவிப்பு மக்கள் நடத்திய போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த அறிவிப்பை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரில் சட்டமாக நிறைவேற்றி கெஜெட்டில் வெளியிட வேண்டும். மேலும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சிக்கு எதிராகவும் சட்டம் இயற்ற வேண்டும். இந்த நடவடிக்கையை உறுதியாக மேற்கொண்டு இந்த நெல் விளையும் பூமியை பாதுகாக்க வேண்டும்.

மேலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சிக்கு எதிராகவும், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் அமைதியாக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என துரைமாணிக்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : protesters ,
× RELATED கொரோனா கண்டுபிடிக்க பொது இடத்தில்...