×

அரிமளம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி

திருமயம், பிப். 11: சந்தனகாப்பு விழாவையொட்டி அரிமளம் அருகே வடமாடு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாடுகள் முட்டியதில் 3 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழபனையூர் பனையுடைய அய்யனார் கோயில் சந்தனகாப்பு திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக கடந்த 2 வாரமாக பிரத்யேகமாக வட்டவடிவ தடுப்பு அமைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 10 மாடுகள் பங்கேற்றது. முன்னதாக போட்டியில் பங்கேற்ற மாடுகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். மைதானத்தின் நடுவில் நீண்ட கயிற்றில் ஒவ்வொரு மாடாக கட்டப்பட்டது.

இவ்வாறு கட்டப்பட்ட மாட்டை அடக்குவதற்கு 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் குழு களத்தில் இறங்கியது. இதில் ஒரு மாட்டை அடக்குவதற்கு வீரர்களுக்கு 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்துக்குள் மாட்டை மாடுபிடி வீரர்கள் அடக்கினால் மாடுபிடி வீரர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம், சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. வீரர்களிடம் மாடு பிடிபடாமல் இருந்தால் மாடு வெற்றி பெற்றதாக அறிவித்து மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்வாறாக நடந்த போட்டியில் 7 காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை தட்டி சென்றனர். மாடுகள் முட்டியதில் 3 வீரர்கள் லேசான காயமடைந்தனர்.

இவர்களுக்கு மஞ்சுவிரட்டு திடல் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மஞ்சுவிரட்டு போட்டியை காண்பதற்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளானோர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழப்பனையூர் மக்கள் செய்திருந்தனர். அரிமளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Arimalam ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...